தஞ்சாவூர் மாநகரிலுள்ள வீடுகளில் க்யூஆர் கோடு ஒட்டும் பணி - மேயர் தொடக்கி வைத்தார்
தஞ்சாவூர் மாநகரிலுள்ள 51 வார்டுகளிலும் க்யூஆர் கோடு ஒட்டும் பணி ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகரிலுள்ள வீடுகளில் க்யூஆர் கோடு ஒட்டும் பணி தொடங்கப்பட்டது. இது மக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் சேவைகளைப் பெறவும், புகார்களைத் தெரிவிக்கவும் டிஜிட்டல்மயமாக்கும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து தஞ்சாவூர் மாநகரிலுள்ள வீடுகளில் கியூஆர் ஸ்கேன் கோடு ஸ்டிக்கர் ஓட்டும் பணி தொடங்கப்பட்டது.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை நடராஜபுரம் ஏழாவது தெருவில் இப்பணியை மேயர் சண். ராமநாதன் தொடக்கி வைத்தார். வீடுகளில் க்யூஆர் ஸ்கேன் கோடு ஸ்டிக்கரை ஒட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த க்யூஆர் ஸ்கேன் கோடு ஒவ்வொரு இல்லத்திலும் ஒட்டப்படுகிறது. இதை ஸ்கேன் செய்யும்போது பொதுமக்களின் தேவைகளை நிறைவு செய்யும் விதமாக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. குடிநீர் வராதது, குப்பை அள்ளப்படாதது உள்பட எந்த பிரச்னையாக இருந்தாலும், மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிய வரும்.
உதாரணமாக குடிநீர் குழாயில் அடைப்பால் தண்ணீர் வரவில்லை என்றால், மாநகராட்சி அலுவலகத்தில் மனுவாக கொடுக்கும்போது, அதைச் சீர் செய்வதற்கு ஓரிரு நாள்களாகும். இப்போது, இந்த க்யூஆர் கோடு வசதி மூலம் ஸ்கேன் செய்து தெரிவித்தால், அடுத்த ஓரிரு மணிநேரத்தில் அப்பிரச்னை சரி செய்யப்படும். இதன் மூலம், மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். இதனால் மக்களுக்கு நேர விரயம் குறைந்து விடுகிறது.
இதேபோல, இந்த வசதி மூலம் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, புதை சாக்கடை தொகை என எதுவாக இருந்தாலும் உடனடியாக வீட்டிலிருந்தே செலுத்தலாம். இந்த க்யூஆர் கோடில் வார்டு எண், தெரு பெயர், கதவு எண், தொடர்பு எண், குடிநீர் வரி எண், புதை சாக்கடை இணைப்பு எண், மின் இணைப்பு எண், குடும்ப அட்டை எண் உள்பட ஒவ்வொரு வீட்டினரின் முழுத் தகவலும் இருக்கும்.
தஞ்சாவூர் மாநகரிலுள்ள 51 வார்டுகளிலும் க்யூஆர் கோடு ஒட்டும் பணி ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும். இது உடனடியாக பயன்பாட்டுக்கு வந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து சிவகங்கை பூங்காவில் மேற்கொள்ளப்பட்டும் வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டார். பின்னர் நடைபாதை தளம், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் போன்றவை தயாராகிவிட்டன. கதை முற்றம், விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. இப்பணிகள் 3 மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று தெரிவித்தார்.
மாநகராட்சி செயற் பொறியாளர் எஸ். ஜெகதீசன், மாநகர நல அலுவலர் வீ.சி. சுபாஷ் காந்தி, உதவிப் பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் உடனிருந்தனர்.