அதிராம்பட்டினத்தில் இடிக்கப்பட்ட இந்திரா காந்தி மணிமண்டபத்தை மீண்டும் கட்டித்தர கோரி மனு
அதிராம்பட்டினம் சேர்மன் வாடி பஸ்ஸ்டாண்ட் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மணிமண்டபம் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இடிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மணிமண்டபத்தை மீண்டும் கட்டித் தர வலியுறுத்தி அதிராம்பட்டினம் காங்கிரஸ் கமிட்டி சார்பாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் தமிம் அன்சாரி தலைமையில், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சிறுபான்மை பிரிவு நாகூர் கனி, சேதுபாசத்திரம் வட்டார காங்கிரஸ் தலைவர் சேக் இப்ராஹிம், அதிராம்பட்டினம் சிறுபான்மை நகரத் தலைவர். முகமது மாலிக், குருவிக்கரம்பை தியாகி சம்பத் ஆகியோர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
அதிராம்பட்டினம் சேர்மன் வாடி பஸ்ஸ்டாண்ட் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மணிமண்டபம் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு நகராட்சி ஒப்பந்தக்காரர்களால் இந்த மண்டபம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மறுநாள் 11ம் தேதி நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்தோம். அப்போது அங்கு இருந்த துணைத்தலைவர் குணசேகரன் எங்களிடம் வாக்குவாதம் செய்தார். மேலும் மூன்றில் ஒரு பங்கு நிதி தாருங்கள் கட்டித் தருகிறோம் என்று வலியுறுத்தினார். இதற்கு நாங்கள் ஒத்து கொள்ளவில்லை. எனவே இந்த பிரச்னையில் தலையிட்டு மேற்கண்ட இடத்தில் இந்திரா காந்தி மணி மண்டபத்தை மீண்டும் அதே இடத்தில் கட்டி தர ஏற்பாடு செய்து தர கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் மேட்டு தெருவை சேர்ந்த முகமது இப்ராஹிம் என்பவரின் மகன் ஷேக் தாவூத் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டேன். இதனால் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளேன். எனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள அடையாள அட்டை பெற்றுள்ளேன். மூன்று சக்கர வாகனம் வழங்கினால் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம் நெடுவாசல் ஊராட்சியை சேர்ந்த 1 முதல் 6 வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் சார்பில் தனித்தனியாக கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது;
எங்கள் வார்டு 1ல் சரியான சாலை வசதி இல்லை, தெரு விளக்கும் எரிவதில்லை, சுத்தமான தண்ணீர் வருவதில்லை. இது தொடர்பாக பலமுறை எங்கள் ஊராட்சி தலைவரிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. இதேபோல் வார்டு 2ல் தெருக்கள் சாலை மற்றும் மயான சாலையை சீரமைக்க வேண்டும். 3வது வார்டில் வடிகால் வசதி இல்லை, 4வது வார்டு கம்பந்தன்குடி – வளையல்கார தெருவில் மயான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 5வது வார்டில் வாட்டர் டேங்குகளை புதிதாக மாற்றித் தர வேண்டும். 6வது வார்டில் குடிநீர் செய்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.