மறக்குமா அந்த நாள்... மறக்காமல் 42 ஆண்டுக்கு பிறகு சுகப்பிரசவம் பார்த்த அரசு மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய பெண்
தனக்கு சுகப்பிரசவம் நடக்க காரணமாக இருந்த தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கி அந்த நாள் எனக்கு மறக்காத நாள் என்று நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தஞ்சாவூர்: தனக்கு சுகப்பிரசவம் நடக்க காரணமாக இருந்த தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கி அந்த நாள் எனக்கு மறக்காத நாள் என்று நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் எழிற்செல்வி (64). இவர் மிகவும் ஆபத்தான நிலையில் பிரசவத்துக்காக கடந்த 1981ம் ஆண்டில் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் மருத்துவக்குழுவினர் அவருக்கு சுகப்பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தில் எழிற்செல்விக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் வீடு திரும்பினர்.
இதற்கிடையில் எழிற்செல்வியின் கணவரின் பணி நிமித்தமாக டில்லி அருகேயுள்ள கங்கோத்ரிக்கு சென்று வசித்து வருகிறார். தற்போது எழிற்செல்வியின் மகளுக்கும் திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் 42 ஆண்டுகள் கடந்த போதும் ஆபத்தான நிலையில் வந்த தனக்கு சுகப்பிரசவம் பார்த்த உயிருடன் மீட்டுக் கொடுத்த தஞ்சாவூர் அரசு ராசா மருத்துவமனையை நினைவில் வைத்திருந்து, அதன் சேவையைப் பாராட்டி, மருத்துவமனை வளர்ச்சிக்காக ரூ. 50 ஆயிரம் நன்கொடையை எழிற்செல்வி வழங்கியுள்ளார்.
இதற்கான காசோலையை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜிநாதனிடம் முனிசிபல் காலனியில் வசிக்கும் எழிற்செல்வியின் அண்ணன் சி.ஆர். பாலசுப்பிரமணியன் நேரில் வழங்கினார். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:
எனது பணிக்காலத்தில் அரசு மருத்துவமனையின் சேவையைப் பாராட்டி, தனி நபர் இப்படியொரு நன்கொடையை வழங்கியிருப்பது இதுவே முதல் முறை. இது, மானுடம் இன்றளவும் நன்றி மறவாமல் உள்ளதைக் காட்டுவது மட்டுமல்லாமல், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட அனைவரும் மன நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த மருத்துவமனையில் கடந்த 2021 ஆண்டில் 46.1 சதவீதமாக இருந்த தாய்- சேய் இறப்பு விகிதம் நடப்பாண்டு 37.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. எடை குறைவாக பிறந்து உயிர் வாழும் குழந்தைகளின் விகிதம் கடந்த ஆண்டு 80.53 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 86.2 சதவீதமாக முன்னேற்றம் அடைந்துள்ளது.
குறை மாத குழந்தைகள் உயிர் வாழ்தல் விகிதம் 2022ம் ஆண்டில் 74.8 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் 82.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் 3 பெண்களுக்கு பிறந்தன. அனைவரும் நலமாக விடுவிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
தேசிய உணவு நாளையொட்டி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையிலும் நோயாளிகளுக்கு எவர்சில்வர் தட்டுகளில் உணவு வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான செலவை மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர்கள் ஏ. செல்வம், சுப்புராமன், மகப்பேறு, மகளிர் நலத் துறை மருத்துவர்கள் ராஜேஸ்வரி, ராஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நன்றி மறப்பது நன்றன்று என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக ஆபத்தான நிலையில் இருந்த தனக்கு சுகப்பிரசவம் ஏற்பட காரணமாக இருந்த மருத்துவமனையை இத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காமல் தன்னால் முடிந்த நிதியுதவியை அளித்த அந்த பெண்ணை அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.