சுத்தம் சுகாதாரத்தின் முன்னோடியாக திகழும் வல்லம் வளம் மீட்பு பூங்கா!
வல்லம் வளம் மீட்பு பூங்கா கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்த போது அமைக்கப்பட்டது. சிறந்த செயல்பாட்டால் விருதும் பெற்றது
தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லத்தில் இயங்கி வரும் "வளம் மீட்பு பூங்கா" சுத்தம், சுகாதாரத்தின் முன்னோடியாக திகழ்கிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வல்லம் பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
15 வார்டுகளை கொண்ட வல்லம் பேரூராட்சி
தஞ்சை அருகே வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. வல்லத்தை சுற்றி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என நிறைந்து உள்ளன. எப்போதும் போக்குவரத்து நிறைந்த இப்பேரூராட்சியில் 4743 குடியிருப்பு வீடுகளும், 480 வணிக கட்டிடங்களும் உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் வார்டு 12ல் அமைந்துள்ள அய்யனார் நகர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
7 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளம் மீட்பு பூங்கா
இங்கு அமைந்துள்ளதுதான் வளம் மீட்பு பூங்கா. 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளம் மீட்பு பூங்கா கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்த போது அமைக்கப்பட்டது. சிறந்த செயல்பாட்டால் விருதும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. பேரூராட்சி வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் குவிக்கப்படும் கிடங்கு இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை குப்பைகள் சேகரிக்கும் கிடங்கு என்று யார் இதை கூறினாலும் நம்ப முடியாத அளவிற்கு சிறப்பான செயல்பாட்டை கொண்டு விளங்கி வருகிறது. சிறப்பான செயல்பாடுகளால் மாவட்ட அளவில் மட்டுமின்றி மாநில அளவில் வல்லம் பேரூராட்சி வள மீட்பு பூங்கா முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.
உரப்படுக்கை அமைக்கப்படுகிறது
இங்கு தினசரி சேகரமாகும் குப்பையின் அளவு 4.23 டன், அதில் 2.54 டன் மக்கும் குப்பையும் 1.04 டன் மக்காத குப்பையும் 0.65 டன் வடிகால் மண் சேகரம் செய்யப்படுகிறது. தூய்மை பணியாளர்கள் மூலம் தினமும் சேகரிக்கப்படும் மக்கும் திடக்கழிவுகளை உரப்படுக்கை அமைத்து அதில் EM Solution தெளிக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை உரப்படுக்கை மாற்றி அமைக்கப்படுகிறது இதே போல் மூன்று முறை மாற்றி அமைக்கப்பட்டு 45 நாட்கள் பிறகு மக்கிய திடக்கழிவுகளை சலிக்கப்பட்டு இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது. இது விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விபனை செய்யப்படுகிறது.
இதே போல் 30 நாட்கள் பிறகு மக்கிய திடக்கழிவுகளை மண்புழு உர தொட்டிற்கு மாற்றப்பட்டு அதில் மென்மையான காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகள் தெளிக்கப்பட்டு 15 நாட்கள் பிறகு மண்புழுவின் கழிவுகள் மேல்தளத்தில் உள்ளதை சேகரம் செய்து மண்புழு உரமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவில் தேக்கு, மூங்கில், கொய்யா, பலா, வாழை மரங்கள் இயற்கை உரம் தெளிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. காய்கறி செடிகளும் உள்ளன.
பயன்தரும் மரக்கன்றுகள் பராமரிப்பு
இதேபோல் மக்காத திடக்கழிவுகளில் நெகிழி, பேப்பர், அட்டைகள், கண்ணாடி பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகிய மறுசுழற்சி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமா? மாடுகள், கோழிகள், வாத்துகள், குதிரைகள் வளர்க்கப்படுகிறது. இப்படி அனைத்து விதத்திலும் குப்பைகளை பயன் உள்ளதாக மாற்றி வளமான வளம் மீட்பு பூங்கா வல்லத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவில் மற்றொரு அம்சமாக சமுதாய தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. பயன்தரும் மரக்கன்றுகள், காய்கறி தோட்டம் அமைத்து பராமரிக்கப்படுகிறது. சுத்தத்திற்கும், சுகாதாரமான வளாகமாகவும் வளம் மீட்பு பூங்க பராமரிக்கப்படுகிறது.
இதுகுறித்து வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் மற்றும் செயல் அலுவலர் ராஜசேகர் ஆகியோர் கூறுகையில், இந்த வளம் மீட்பு பூங்காவின் செயல்பாட்டிற்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். பேரூராட்சியின் அனைத்து ஊழியர்களின் கடினமான உழைப்பால் வல்லம் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மையில் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது. இந்த பணிகள் மேலும் சிறப்பாக செயல்படுத்த முனைப்புடன் பணியாற்றி வருகிறோம் என்றனர்.