வல்லம் வளம் மீட்பு பூங்காவில் பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விளக்க பயிற்சி
தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் திடக்கழிவுகளை உரப்படுக்கையாக அமைக்கப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.

தஞ்சாவூர் அருகே வல்லம் வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலைமகள் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி. இங்கு 15 வார்டுகள் உள்ளன. வல்லத்தை சுற்றி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என ஏராளமாக உள்ளன. எந்நேரமும் போக்குவரத்து நிறைந்த இப்பேரூராட்சியில் 4743 குடியிருப்பு வீடுகளும், 480 வணிக கட்டிடங்களும் உள்ளது. தினமும் இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் வார்டு 12ல் அமைந்துள்ள அய்யனார் நகர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த குப்பைகள் சேகரிக்கப்படும் இடம் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைக்கிடங்கிற்கு வளம் மீட்பு பூங்கா என்று பெயர். எந்த வித துர்நாற்றமும் வீசுவது கிடையாது. சுற்றுலாவிற்கு செல்லும் பகுதியில் உள்ள இந்த பூங்கா உள்ளது. 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளம் மீட்பு பூங்கா மிகவும் சிறப்பான செயல்பாடுகளால் மாவட்ட அளவில் மட்டுமின்றி மாநில அளவில் முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. இங்கு தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் திடக்கழிவுகளை உரப்படுக்கையாக அமைக்கப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. இந்த இயற்கை உரங்களை மிகக் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவில் தேக்கு, மூங்கில், கொய்யா, பலா, வாழை என்று நூற்றுக்கணக்கில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
மாடுகள், கோழிகள், வாத்துகள் மற்றும் முயல்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு வளர்க்கப்படும் மரங்கள், காய்கறிச் செடிகள் போன்றவற்றுக்கு மண்புழு உரம்தான் இடப்படுகிறது; மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரத்தை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனையும் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் மகசூலுக்கு அதிகம் உதவிகரமாக உள்ளது. இப்படி அனைத்து விதத்திலும் குப்பைகளை பயன் உள்ளதாக மாற்றி வளம் மீட்பு பூங்கா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவிற்கு பள்ளி மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி உட்பட சுற்றுப்பகுதியில் உள்ள பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் வந்து பார்வையிட்டு பயிற்சியும் பெற்றுள்ளனர். இங்கு வரும் மாணவர்கள் இது குப்பை சேகரிக்கும் கிடங்கா என்று ஆச்சரியப்படுகின்றனர். அந்தளவிற்கு சுற்றுலாப்பூங்கா போல் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கலைமகள் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து வளம் மீட்பு பூங்காவின் செயல்பாடுகளை பார்த்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு பேரூராட்சி பணியாளர்கள் திடக்கழிவு மேலாண்மை, உரப்படுக்கை அமைக்கப்படும் விதம், மண்புழு உரம் தயாரிப்பு, மரங்கள் வளர்ப்பு போன்றவை குறித்து விளக்கம் அளித்தனர்.
இதில் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் வீடுகளில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எப்படி தரம்பிரிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினர். ஏற்பாடுகளை பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

