மனைப்பட்டா வழங்குங்கள்... கலெக்டரிடம் 47 குடும்பங்கள் அளித்த மனு
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் விவசாய தினக்கூலி பணியாளர் ஆகிய எங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டிக்கொள்ள சொந்தமாக இடம் கிடையாது.

தஞ்சாவூர்: அம்மாபேட்டை அருகே வடபாதி கிராமத்தில் நீர்வளத் துறைக்கு சொந்தமான வடவற்றில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த மக்கள் தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர்.
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை வடபாதி ஊராட்சி கொக்கேரி கிராமத்தினர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் வடபாதி ஊராட்சி கொக்கரி கிராமம் கீழத்தெருவில் சுமார் 37 வீடுகளில் 47 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய சாலை கிழக்கு பகுதி மற்றும் புத்தூர் வாய்க்கால் மேற்கு கரை பகுதிகளில் வசித்து வருகிறோம். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் விவசாய தினக்கூலி பணியாளர் ஆகிய எங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டிக்கொள்ள சொந்தமாக இடம் கிடையாது.
வேறு வசிப்பிடம் இல்லாத எங்களை தற்போது வசித்து வரும் இடத்தில் இருந்து காலி செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக அனைத்து அரசு குறைதீர்க்கும் கூட்டத்திலும் வீட்டுமனை பட்டா வழங்கிட கோரி மனுக்கள் வழங்கியுள்ளோம்.
50 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தரமாக வசித்து வருவதால் வாய்க்கால் கரைகளை மண் அடித்து உயர்த்தி பலப்படுத்தி பாதுகாப்பாக வைத்து வருகிறோம். எனவே வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் எங்களுக்கு நிரந்தர வீடு கட்டிக் கொள்ள அரசால் சொந்தமாக வீட்டுமனை பட்டா வழங்க ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் குருங்குளம் கிழக்கில் 2021 ஆம் நிதி ஆண்டிலிருந்து 2025 வரை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஆள்மாறாட்டம் செய்து ஊராட்சி செயலர், பணித்தள பொறுப்பாளர் துணையோடு பல லட்சம் ரூபாய் நிதி மோசடி செய்தது குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குருங்குளம் கிழக்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு வழங்கினர்.
அந்த மனுவில் கூறியதாவது: எங்கள் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் பல்வேறு வேலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணிக்கு வராதவர்களின் பணி அட்டை பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடாத பணியாளர்களின் கையொப்பங்கள் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
பணி செய்யாத நபர்களின் பெயர்களில் உள்ள அட்டைகளை பயன்படுத்தி வங்கி கணக்கின் மூலம் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. பணி செய்யாத நபர்கள் பெயரில் பல லட்சம் ரூபாய் முறைகேடாக மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு நிதி பல லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது கிராம மக்களுக்கு உரிய நலத்திட்ட நன்மைகள் கிடைக்கவில்லை. எனவே குருங்குளம் கிழக்கு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யாத பணியாளர்கள் பெயரில் மோசடி செய்து பல லட்சம் ரூபாய் அரசு பணத்தை பாரிசு உருட்டிய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீதும் தஞ்சாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





















