திருவையாறுடன் விளாங்குடி, வில்லியநல்லூரை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
இப்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் எங்கள் ஊராட்சிகளை தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் இணைத்தால் நாங்கள் மேலும் பாதிக்கப்படுவோம்.
தஞ்சாவூர்: எங்கள் ஊராட்சிகளை தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் இணைக்கக்கூடாது என்று வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விளாங்குடி மற்றும் வில்லியநல்லூரை சேர்ந்த கிராம மக்கள் 300க்கும் அதிகமானோர் திரண்டு வந்து மனு அளித்தனர்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றார். அந்த வகையில் விளாங்குடி மற்றும் வில்லியநல்லூரை சேர்ந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தாமரைச்செல்வி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட முன்னாள் செயலாளர் உறவழகன், திருவையாறு தொகுதி செயலாளர் கதிரவன், ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் விளாங்குடி, வில்லியநல்லூர் ஊராட்சிகள் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் அதிகம் பேர் விவசாய கூலித் தொழிலாளர்கள். இப்பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகும். இந்நிலையில் திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவையாறு நகராட்சியுடன் விளாங்குடி, வில்லியநல்லூர் ஊராட்சிகளை இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு 100 நாள் வேலை திட்டம்தான் உறுதுணையாக உள்ளது.
திருவையாறு நகராட்சியுடன் எங்கள் விளாங்குடி, வில்லிநல்லூர் ஊராட்சிகளை இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். மேலும் விலையில்லா ஆடுகள், விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டங்கள் நகராட்சி மக்களாக கிராம மக்கள் மாற்றப்பட்டால் கிடைக்க வழியில்லாமல் போய்விடும். சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர் வரி போன்றவை பல மடங்கு உயர்ந்துவிடும். அனைத்து பொருட்களின் விலையும் உயர்வடைந்து விடும். இவற்றை கூலித் தொழிலாளர்களான எங்களால் செலுத்த இயலாத நிலை ஏற்படும்.
மேலும் தமிழக அரசின் இலவச பசுமை வீடுகள், மத்திய அரசின் இலவச வீடுகள் போன்ற திட்டங்களை இழக்க நேரிடும். 100 நாள் வேலை திட்டம் பல ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. எனவே விளாங்குடி, வில்லியநல்லூர் ஊராட்சியை தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் இணைக்க கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளாங்குடி, வில்லியநல்லூர் மக்கள் தரப்பில் தெரிவிக்கையில், இப்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் எங்கள் ஊராட்சிகளை தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் இணைத்தால் நாங்கள் மேலும் பாதிக்கப்படுவோம். 100 நாள் வேலை திட்டம்தான் பல்வேறு ஏழை தொழிலாளர்களுக்கு உதவிகரமாக உள்ளது. அதுவும் பறிபோய் விடும். இதேபோல் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் எங்களுக்கு கிடைக்காமல் போய்விடும் நிலை உள்ளது. பசுமை வீடுகள் உட்பட பல்வேறு திட்டங்கள் இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு கிடைக்காது. எனவே எங்கள் ஊராட்சிகளை திருவையாறு நகராட்சியுடன் இணைக்கக்கூடாது. இப்பகுதியில் உள்ளவர்கள் ஏராளமானோர் விவசாய ஏழை கூலித் தொழிலாளர்கள்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.