30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக விலை உயர்ந்துள்ள செண்டிப்பூக்கள்
நான் 30 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறேன். இதுபோன்ற விலை உயர்வு இப்போது தான் காணப்படுகிறது.
தஞ்சாவூர்: கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வறட்சியால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் செண்டிப்பூக்கள் விலைஉயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது. கிலோ ரூ.30-க்கு விற்ற பூ தற்போது ரூ.130-க்கும் கூட கிடைக்கவில்லை என வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர். காரணம் கடும் வெயில் மற்றும் கோடை மழை பெய்யாததுதான் என்கின்றனர் விவசாயிகள்.
செண்டிப்பூக்கள் சாகுபடி
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, உளுந்து, பச்சை பயறு, வெற்றிலை, மக்காச்சோளம், எள், மரவள்ளிக்கிழங்கு, மற்றும் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பாபநாசம், சுவாமிமலை, அய்யம்பேட்டை பகுதிகளில் ரோஜாப் பூ, மல்லிகை, கனகாம்பரம் போன்ற பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி, அற்புதாம்பாள்புரம், குருங்குளம், திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் செண்டிப்பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
நான்குமுறை வயலை உழ வேண்டும்.
செண்டிகைப்பூ சாகுபடிக்காக முதலில் 2 முறை வயலை நன்கு உழ வேண்டும். அப்போதான் மண் நன்றாக பொலபொலவென்று மாறும். இந்த இரண்டு முறை உழவுக்கு பின்னாடி 2 டன் இயற்கை உரம் அதாவது தொழுஉரம் போட்டு நல்லா வயலை சமன்படுத்தணும். அதுக்கு மறுபடியும் மற்றொரு முறை வயலை உழ வேண்டும். அப்போதான் தொழு உரம் மண்ணோடு நன்றாக கலந்து உயிர்ச்சத்துக்களை உற்பத்தி செய்யும்.
மூன்றாவது உழவின்போது ஒரு டன் தொழு உரம் போட்டா போதும். பின்னர் நாலாவது முறையாக வயலை உழுது முடிச்சிட்டு பார் அமைக்கணும். செண்டிப்பூ விதைகள் நாற்று நடவு செய்து 20 நாட்களில் வளர்ந்து விடும். பின்னர் அதனை பறித்து நடவு செய்வார்கள். நடவு செய்யப்பட்டதில் இருந்து 60 நாட்களில் செண்டிப்பூ அறுவடைக்கு வந்து விடும். 60 நாட்கள் முதல் 100 நாட்கள் வரை தொடர்ந்து அறுவடை செய்யப்படும். கோடை காலங்களில் செண்டிப்பூக்கள் அதிகளவில் அறுவடை செய்யப்படும். குளிர் காலங்களில் பூக்கள் அறுவடை சற்று குறைவாக காணப்படும்.
வெயில் கொளுத்துவதால் கடும் வறட்சி
செண்டிப் பூக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மாலைகளை பெரும்பாலும் இறைவனுக்கு பயன்படுத்துவதில்லை. இருப்பினும் கிராமக்கோவில்களில் இவ்வகை மாலைகளை அனுமதிப்பார்கள். ஆனால் துக்க காரியங்களுக்கே இவ்வகை மாலைகள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வரலாறு காணாத வகையில் வெயில் கொளுத்தி வருவதால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள பூக்கள் விளைச்சலும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு செண்டிப்பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது.
தஞ்சை பூ மார்க்கெட்டிற்கு வரத்து குறைவு
தஞ்சை பூ மார்க்கெட்டிற்கு தஞ்சை திருக்கானூர்பட்டி, மாப்பிள்ளைநாயக்கன்பட்டி, பாபநாசம், திருவையாறு உள்பட தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த பூக்கள் விலை அதிக பட்சமாக கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு விலை கொடுத்தாலும் பூக்கள் கிடைப்பதும் அரிதாக உள்ளது.
இதுகுறித்து பூ மொத்த வியாபாரி சந்திரசேகர் கூறுகையில், தற்போது பூக்கள் விலை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. அரளிப்பூ ரூ.150-க்கும், சம்மங்கி ரூ.150-க்கும், மல்லிகை ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.50-க்கும், பன்னீர் ரோஜா ரூ.150-க்கும், மரிக்கொழுந்து கட்டு ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் செண்டிப்பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது. என்றார்.
மாலை வியாபாரிகள் கருத்து
பூ மாலை கட்டி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், "வழக்கமாக செண்டிப்பூக்கள் கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படும். ஆயுதபூஜை காலக்கட்டத்தில் மட்டும் பஸ், லாரி, வாகனங்களில் செண்டிப்பூக்கள் மாலை கட்டுவதால் வழக்கத்தை விட விலை உயர்ந்து அதிக பட்சமாக கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. நான் 30 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறேன். இதுபோன்ற விலை உயர்வு இப்போது தான் காணப்படுகிறது.
கடும் வறட்சி காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விலை உயர்வு காணப்படுகிறது. தஞ்சை பூ மார்க்கெட்டில் எப்போது சென்றாலும் செண்டிப்பூ வாங்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது தட்டுப்பாடு காரணமாக அதிகாலை 3 மணிக்கு சென்றாலும் கிடைக்காததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இந்த விலை உயர்வு காரணமாக மாலையும் இருமடங்காக விலை உயர்ந்துள்ளால் வாடிக்கையாளர்களும் எங்களிடம் இவ்வளவு விலையா? என ஆதங்கப்படுகின்றனர்" என்றார்.