ஆடு திருடியதை பார்த்த நபர் கொலை; 5 ஆண்டுக்கு பின் கொலையாளி சிக்கியது எப்படி?
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கொலை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி., ஆஷிஷ் ராவத் வெகுவாக பாராட்டினார்.
தஞ்சாவூர்: ஆடு திருடியதை பார்த்த நபரை அடித்து கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த நபரை 5 ஆண்டுகள் பல்வேறு கட்ட தீவிர விசாரணைக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே நரியங்காடு கிராமத்தில், கடந்த 2019ம் ஆண்டு ஜூலை.13ம் தேதி, பாதி எரிந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் கிடந்தது. இதுகுறித்து வி.ஏ.ஓ., தனசேகரன் அளித்த தகவல் பேரில், திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், அவர் இறந்த கிடந்த இடத்தில், ஒரு சாக்கு முட்டையில், இரத்த கறை படிந்த பெட்சீட், துண்டு, சிவப்பு நிற டிசர்ட், ஊதா நிற கைலி ஆகியவை இருந்தன. இதை தடய அறிவியல் நிபுணர்கள், விரல்ரேகை பதிவு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் தடயங்களை கைப்பற்றினர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2019ம் ஆண்டு ஜூலை.8ம் தேதி, திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரது 100 ஆடுகள் திருடப்பட்டது. ஆடு திருடு போனது தொடர்பாக, மதியழகன் தேடி சென்ற போது, புனல்வாசல் பகுதியில் ஆடு மேய்க்கும், புதுக்கோட்டை மாவட்டம் குலவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா (42) என்பவர், ஆடுகளை மர்ம நபர்கள் திருடி கொண்டு வந்த போது,பார்த்து ஆடுகளை மீட்டு வைத்துள்ளதாக கூறி, மதியழகனிடம் அந்த ஆடுகளை ஒப்படைத்துள்ளார்.
இதற்கிடையில், தனது ஆட்டுப்பட்டி குறித்து மர்ம நபர் ஒருவர், புனல்வாசல் கிராமத்தை சேர்ந்த செல்லப்பனிடம் விசாரித்ததாக, மதியழகனுக்கு கிடைத்த தகவலின் படி, அந்த மர்ம நபர் தான் ஆடுகளை திருடி இருக்க வேண்டும் என்பதால் அவரைக் கொல்ல, மதியழகள் மற்றும் அவரது சகோதரர்கள் திட்டமிட்டு இருந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதையடுத்து போலீசார் மதியழகன் மற்றும் அவரது சகோதரர்களின், மொபைல் பதிவுகளையும் ஆய்வு செய்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும் கொலை செய்ததற்கான எந்த முகாதாரமும் இல்லாததால் வழக்கில் தொய்வு ஏற்பட்டது.
இருப்பினும் வழக்கினை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் எஸ்பி ஆஷிஷ் ராவத் உத்தரவின் பெயரில், சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இதில், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன், தலைமைக் காவலர் புகழேந்தி ஆகியோர் மீண்டும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஜூலை 11ஆம் தேதி முதல் விசாரணையை துவங்கினர்.
மீண்டும், திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த மதியழகன் அவரது சகோதரர்கள் ஆகியோரை விசாரித்தனர். இதில், ஆடுகளை திருப்பிக் கொடுத்தாக கூறிய ராஜா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் ராஜாவை விசாரிக்க திட்டமிட்ட போலீசார், வெகு நாட்களாக தேடி, அவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.
விசாரணையில் ராஜா, மதியகழனிடம் ஆடுகள் திருடியதை, பார்த்த மர்ம நபர் ஒருவர் புனவாசல் பகுதியில் உள்ள செல்லப்பனிடம் மதியழகன் ஆடுகள் திருடப்பட்டதை அவரிடம் கூற வேண்டும் என விசாரித்ததாகவும், அந்த மர்ம நபர் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 30 , என்பவர் என ராஜா அறிந்தார். எங்கு தன்னை அவர் அடையாளம் காட்டி விடுவாரோ என நினைத்து ராஜா, வெகு நாட்களாக ஆறுமுகத்தை தேடி அவரை கொன்று விட வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.
அப்போது ஆறுமுகம் மீண்டும் புனவாசல் பகுதிக்கு வந்தபோது அவரிடம் நைசாக பேசிய ராஜா, தனக்கு வேலை வழங்குவதாக கூறி, திருச்சிற்றம்பலம் சுடுகாட்டு பகுதிக்கு, ஆறுமுகத்தை அழைத்து சென்று, மது அருந்த வைத்துள்ளார்.
பின்னர் ராஜா தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால், ஆறுமுகத்தின் தலையில் அடித்துக்கொன்று, அவரின் உடலை நரியங்காடு பகுதியில் போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம் ராஜாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கொலை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி., ஆஷிஷ் ராவத் வெகுவாக பாராட்டினார்.