சொத்து பிரச்னையில் தம்பியை கடப்பாரையால் அடித்து கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை
சொத்து பிரச்சினையில் தம்பியை கடப்பாரையால் அடித்து கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே குடிகாட்டில் சொத்து பிரச்சினையில் தம்பியை கடப்பாரையால் அடித்து கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
ஒரே வீட்டில் வசித்து வந்த அண்ணன், தம்பி
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, குடிகாடு, வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் முத்தையன். இவர் வீரமாங்குடி உள்ள ஒரு பள்ளியில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மூத்த மகன் பாஸ்கர் (62). இளைய மகன் ரமேஷ் (45). டிரைவர். விவசாயப்பணியும் பார்த்து வந்தார். ரமேசுக்கு கார்த்திகா என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். அண்ணன், தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
சொத்து பிரச்னை ஆரம்பம்
இந்நிலையில் தங்களின் தந்தை முத்தையன் பெயரில் உள்ள வயல்களில் அண்ணன், தம்பி இருவரும் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் பாஸ்கர் சரிவர குடும்பத்தை கவனிக்கவில்லை என்று கூறி தந்தையின் உதவி தொகை மற்றும் விவசாயம் மூலம் கிடைக்கக்கூடிய தொகையை ரமேஷ் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் அண்ணன், தம்பிக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி ரமேஷ் தங்கள் வயலில் மனைவியுடன் சாகுபடி பணிகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பாஸ்கர், ரமேஷிடம் பணம் குறித்து கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
கடப்பாரையால் தம்பியை தாக்கிய அண்ணன்
இந்நிலையில் வாக்குவாதம் முற்றியதில் பாஸ்கா் கடப்பாரையால் தம்பி ரமேஷை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தலையில் பலத்தகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்தார். உடன் அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் இறந்தார்.
தம்பியை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை
இதுகுறித்து கார்த்திகா, கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா விசாரித்து பாஸ்கருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு சார்பில் சிறப்பு வக்கீல் விஜயக்குமார் ஆஜரானார்.