தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்காமல் தேர்தல் நடத்தக்கூடாது: மாநகராட்சி ஆணையரிடம் மனு
தெருவோர வியாபாரம் செய்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்காமல் வணிக குழு தேர்தல் நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி., மற்றும் சிஐடியூ தொழிற்சங்கங்கள் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளன.
தஞ்சாவூர்: தெருவோர வியாபாரம் செய்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்காமல் வணிக குழு தேர்தல் நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி., மற்றும் சிஐடியூ தொழிற்சங்கங்கள் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளன.
தொடர் போராட்டத்தால் கிடைத்த பாதுகாப்பு சட்டம்
அன்றாடம் தன் வயிற்று பிழைப்புக்காக தங்கள் உழைப்பை செலுத்தி தெருவோரத்தில் காய்கறி,பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வியாபாரம் செய்து தங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கவும், காவல்துறை மற்றும் ரவுடிகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கவும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தி கடந்த 2015 ஆம் ஆண்டு தெருவோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை
இந்த சட்டத்தின்படி தெருவோரத்தில் வியாபாரம் செய்பவர்களுக்கு அந்தந்த இடத்திற்கே சென்று புகைப்படம் எடுத்து, அடையாள அட்டை வழங்கி, அவர்கள் அந்த இடத்திலேயே வியாபாரம் செய்வதை அங்கீகரிப்பது மாநகராட்சியின் கடமையாகும். இந்த அடிப்படையில் தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் தெருவோர வியாபாரம் செய்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டி தொடர்ச்சியாக ஏஐடியூசி, சிஐடியூ தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தொழிற்சங்கங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் அளிக்கப்படாமல் தன்னிச்சையாக தஞ்சை மாநகராட்சி வணிக குழு தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக கேள்விப்பட்டு இதற்கு ஏஐடியூசி, சிஐடியூ சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையரிடம் கொடுக்கப்பட்ட மனு
இந்நிலையில் இதுதொடர்பாக இரண்டு சங்கங்களின் நிர்வாகிகள் சிஐடியூ மணிமாறன், ஏஐடியூசி முத்துக்குமரன் ஆகியோர் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, தெருவோரத்தில் வியாபாரம் செய்பவர்களுக்கு முதலில் அடையாள அட்டை வழங்க வேண்டும். அதற்கு பின்னர் அறிவிப்பு செய்து தொழிற்சங்கங்களுக்கு முன்னறிவிப்பு கொடுத்து வணிக குழு தேர்தலை நடத்த வேண்டும். அதுவரை தற்போது மாநகராட்சி சார்பில் வணிக குழு தேர்தல் நடத்துப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்வில் ஏஐடியூசி நிர்வாகிகள் சேவையா, துரை.மதிவாணன், பாலமுருகன், சிஐடியூ நிர்வாகிகள் அன்பு, மில்லர்பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.
சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும்
சாலையோர வியாபாரிகள் சட்டம் 2014-ன் படி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அவர்களுக்கான தீர்வுகளை அளித்தல், அவர்களை உரிய முறையில் கையாளுதல் ஆகியவற்றில் குறை தீர்க்கும் குழுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகம் செய்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கு திறன் வாய்ந்ததாக குறைதீர்க்கும் குழுக்கள் செயல்பட வேண்டியது முக்கியம். சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் ஏழை வியாபாரிகள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். ரவுடிகள் தொல்லை உட்பட பல விதத்திலும் தொல்லைகளை சந்திக்கின்றனர்.
மிகவும் குறைந்த அளவே கிடைக்கும் வருவாய்
கிடைக்கும் குறைந்த வருவாயையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதை மாற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து விடுக்கப்பட்ட கோரிக்கையின் பலனாக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் நடைபாதை வியாபாரிகள் தங்களின் குறைந்த வருவாயை இழக்காத நிலை ஏற்படும். இதை மட்டுமே நம்பி குடும்பத்தை நடத்தி வரும் நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரம் உயர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான வலியுறுத்தல் ஆகும்.