லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வணிக வரி அலுவலர் மீதான வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை
வியாபாரியிடம் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வணிக வரி அலுவலர் மீதான வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: வியாபாரியிடம் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வணிக வரி அலுவலர் மீதான வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வடசேரியைச் சேர்ந்தவர் பக்தவச்சலம். இவர் செய்து வந்த வியாபாரம் சரியாக நடைபெறாததால், வணிக வரித் துறைக்கு கடந்த 2007ம் ஆண்டில் பூஜ்ய அறிக்கையை அனுப்பினார். இதைத் தொடர்ந்து, பக்தவச்சலத்தை பட்டுக்கோட்டை வணிக வரி அலுவலர் ஸ்ரீதரன் (தற்போது 70 வயது) வரவழைத்து தனக்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும். தங்களிடமுள்ள ரசீதுகளை எடுத்து வாருங்கள். முதலில் ஆயிரம் ரூபாய் கொண்டு வாருங்கள் என்று பக்தவச்சலத்திடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பக்தவச்சலம் இதுகுறித்து தஞ்சாவூர் ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், ஊழல் தடுப்பு காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஊழல் தடுப்பு காவல் துறையினர் கூறியது போல் வியாபாரி பக்தவச்சலம் நடந்து கொண்டார். அதன்படி கடந்த 2007, செப்டம்பர் 12ம் தேதி பக்தவச்சலத்திடம் லஞ்சம் வாங்கிய ஸ்ரீதரனை ஊழல் தடுப்பு காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கை நீதிபதி டி. சண்முகப்ரியா விசாரித்து ஸ்ரீதரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
திருவையாறு அருகே மாமனாரை அடித்துக் கொன்ற மருமகனுக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட மதுக்கூர் அருகே கருப்பூர் கிழக்கு அம்பலக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் அய்யப்பன் (34). ஓட்டுநர். இவர் திருவையாறு பகுதிக்கு வேலை தொடர்பாக அடிக்கடி வந்தபோது வளப்பக்குடியைச் சேர்ந்த ஜோசப் (71) மகளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், ஜோசப்புக்கும், அய்யப்பனுக்கும் கடந்த 2022ம் ஆண்டில் சொத்து பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, அய்யப்பன் தாக்கியதில் ஜோசப் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து மருவூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனைக் கைது செய்த விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் விசாரித்து மாமனாரை அடித்துக் கொன்ற அய்யப்பனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.