Kia First Affordable EV: மலிவு விலை எஸ்யுவி சந்தையை புரட்டி போட தயாரான கியா- லெவல் 2 ADAS, அட்டகாசமான புது கார்
Kia Carens Clavis EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் மலிவு விலை, மின்சார எஸ்யுவி வரும் ஜுலை மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Kia Carens Clavis EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் மலிவு விலை, மின்சார எஸ்யுவியனாது லெவல் 2 ADAS தொழில்நுட்ப அம்சத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
கியா காரென்ஸ் கிளாவிஸ் EV
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனம் தனது மின்சார கார் மாடல்களுக்கான போர்ட்ஃபோலியோவில், மலிவு விலை கார் மாடலாக காரென்ஸ் கிளாவிஸ் எடிஷனை இணைக்க திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனம் சார்பில் ஏற்கனவே EV6 மற்றும் EV9 என்ற இரண்டு பிரீமியம் மின்சார கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிக தேவை மற்றும் போட்டித்தன்மை நிலவும் மலிவு விலை பிரிவு வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில், வரும் ஜுலை மாதத்தில் காரென்ஸ் கிளாவிஸ் மாடலின் மின்சார எடிஷனை அறிமுகப்படுத்த கியா திட்டமிட்டுள்ளது.
காரென்ஸ் கிளாவிஸ் EV -வெளிப்புற, உட்புற வடிவமைப்பு:
காரென்ஸ் கிளாவிஸ் கார் மாடலான் வடிவமைப்பை மின்சார எடிஷன் அப்படியே பின் தொடர்ந்தாலும், அதற்கென தனித்துவமான மற்றும் நுணுக்கமான சில வேலைப்பாடுகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வெளிப்புற பகுதியில் பிளான்க்ட் - ஆஃப் கிரில், ஃப்ரண்ட் ஃபெண்டரில் சார்ஜிங் சாக்கெட், புதிய எல்இடி முகப்பு விளக்குகள், டிஆர்எல்கள் மற்றும் கனெக்டட் டெயில் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மின்சார வாகனத்தின் தோற்றத்தை மேம்படுத்தும் விதமாக ஏரோ ஷேப்ட் அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. உட்புறத்தில் புதிய வடிவிலான ஸ்டியரிங் வீல் உடன், திருத்தியமைக்கப்பட்ட கியர்லிவருக்கான சாத்தியக்கூறு மற்றும் முன்புற இருக்கைகளுக்கு இடையே அதிக இடவசதி ஆகிய அம்சங்கள் இடம்பெறலாம்.
காரென்ஸ் கிளாவிஸ் EV - முக்கிய அம்சங்கள்
- மறுவடிவமைக்கப்பட்ட டூயல் டோன் அலாய் வீல்கள்
- லெவல் 2 ADAS தொழில்நுட்பம்
- வசதியான ட்ரைவிங் மோட்கள்
- ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ உடன் கூடிய பிராண்டட் ஆடியோ சிஸ்டம்
- வெண்டிலேடட் சீட்ஸ் & எலெக்ட்ரிக் சன்ருஃப்
- மல்டி ஸ்மார்ட் கன்வீனியன்ஸ் அம்சங்கள்
காரென்ஸ் கிளாவிஸ் EV - பாதுகாப்பு அம்சங்கள்
மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாக லெவல் 2 ADAS தொழில்நுட்பம் கருதப்படுகிறது. இதில் ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் லேன் டிபார்ட்சுர் வார்னிங் ஆகிய அம்சங்கள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. கூடுதலாக, புகைப்படங்களை ஸ்பீடோமீட்டரில் புரொஜக்ட் செய்யக்கூடிய பிளைண்ட் வியூ மானிட்டர், ரியர் க்ராஸ் ட்ராஃபிக் அலெர்ட் மற்றும் அவாய்டன்ஸ் போன்ற அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகிறது.
காரென்ஸ் கிளாவிஸ் EV- பேட்டரி விவரங்கள்:
ஹுண்டாய் கிரேட்டாவில் இருப்பதை போன்ற 42 KWh மற்றும் 51.4 KWh என்ற பேட்டரி பேக் ஆப்ஷன்களை காரென்ச் கிளாவிஸ் தொடரும் என கூறப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால், 390 மற்றும் 473 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரென்ஸ் கிளாவிஸ் EV - வெளியீடு, விலை:
வரும் ஜுலை மாதம் அறிமுகமாக உள்ள காரென்ஸ் கிளாவிஸ் மின்சார எடிஷனின் விலை ரூ.22 முதல் ரூ.26 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சந்தையில் உள்ள இதன் EV6 மற்றும் EV9 கார்களின் விலை முறையே ரூ.65.9 லட்சம் மற்றும் ரூ.1.3 கோடியாக உள்ளது. அவற்றுடன் ஒப்பிடுகையில் காரென்ஸ் கிளாவிஸ் மின்சார எடிஷன் கியாவின் மிகவும் மலிவு விலை காராக இருக்கும். அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த, குடும்பமாக பயணிக்க ஏற்ற காரை அதிகம் தேடும் மிடில் செக்மெண்டில் இந்த கார் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
கூடுதலாக பாதுகாப்பு, சொகுசு, தொழில்நுட்ப அம்சங்கள், நடைமுறைக்கு உகந்த வடிவமைப்பு போன்ற அம்சங்களால் நகர பயன்பாட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அம்ச விரும்பிகளை காரென்ஸ் கிளாவிஸ் கவரும் என நம்பப்படுகிறது. இது இந்திய சந்தையில் MG Windsor EV, Hyundai Alcazar, வரவிருக்கும் Kia Syros EV, Mahindra XEV 7e ஆகிய கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்பார்க்கலாம்.




















