(Source: ECI/ABP News/ABP Majha)
5 நிமிடத்தில் முடிந்த கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் - அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
’’ஒன்றியத்தின் செயல்பாடுகள் அனைத்தும் தலைவரின் தன்னிச்சையான ஏதேச்சதிகாரத்தால் முடங்கியுள்ளது என குற்றஞ்சாட்டு’’
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்குவதாக அனைத்து உறுப்பினர்களுக்கும் தீர்மான பொருள் அடங்கிய கடிதம் முன்பே அனுப்பப்பட்டது. ஆனால், காலை 10.30 மணிக்கு திமுகவின் 14 உறுப்பினர்கள் கூட்ட அரங்குக்கு வந்ததும், ஒன்றியக்குழுத் தலைவர் காயத்ரி அசோக்குமார் 62 தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக அறிவித்து 5 நிமிடங்களில் கூட்டத்தை முடித்துவிட்டார். பின்னர் திமுகவை சேர்ந்த ஒன்றிய குழு துணைத் தலைவர் கணேசன் உள்ளிட்ட 6 திமுக உறுப்பினர்கள், 6 அதிமுக உறுப்பினர்கள் வந்தபோது கூட்டம் முடிந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் வட்டார வளர்ச்சி அலுவலரின் அறை முன்பாக அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிமுகவினர் கூறுகையில்: கும்பகோணம் ஒன்றியக்குழுக் கூட்டத்தில் 62 தீர்மானங்கள் விவாதத்துக்கு கொண்டு வரப்பட்டது. 11 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே கூட்டத்தை நடத்தி விவாதம் ஏதும் செய்யாமல் தன்னிச்சையாக அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்ற பட்டதாக தலைவர் அறிவித்துள்ளார். கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அருகே உள்ள ஊராட்சிகளுக்கான வளர்ச்சி திட்டங்கள், வரியினங்கள் தொடர்பாக எந்த விவாதமும் கொண்டு வரவில்லை. அதே போல் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தென்னூரில் உள்ள கட்டிடத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்த நிலையில், அதனை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு முழுவதுமாக தாரை வார்க்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் உறுப்பினர்களிடம் ஏதும் கேட்காமலேயே தலைவர் தன்னிச்சையாக கொண்டு வந்து செயல்பட்டுள்ளார். ஆளுங்கட்சியான திமுகவை சேர்ந்தவரும் ஒன்றிய குழு துணை தலைவருமான கணேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வருவதற்குள்ளேயே கூட்டம் முடித்துள்ளதால், திமுக உறுப்பினர்களிடையே ஒற்றுமை இல்லாமல் செயல்படுகின்றனர். இது போன்று ஒன்றிய குழு கூட்டம் நடந்தால், வாக்களித்த மக்களிடம் திட்டங்களை எப்படி கொண்டு செல்ல முடியும், அவர்களது தேவைகளை எப்படி தீர்க்க முடியும். அதே போல் ஒன்றியத்தின் செயல்பாடுகள் அனைத்தும் தலைவரின் தன்னிச்சையான ஏதேச்சதிகாரத்தால் முடங்கியுள்ளது என குற்றஞ்சாட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிமுகவினரை வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் சமாதானம் செய்ததை அடுத்து போராட்டத்தினை விலக்கி கொண்டனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதனிடம் கேட்டபோது, பெரும்பான்மையான உறுப்பினர்கள் வந்ததும் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. கூட்டம் நடத்துவது தொடர்பாக தலைவர் தான் முடிவு செய்வார் என்றார்.