பாராட்டும் இல்ல... டெஸ்ட் முடிவும் தெரியலை: டிஸ்சார்ஜ் செய்தது ஏன்? - உயிர்களை காப்பாற்றியவர்கள் வேதனை
உங்களுக்கு உடம்பு நல்லாத்தான் இருக்கு, நிவாரணம் எதுவும் குடுப்பாங்கனு இங்க படுத்து கிடக்குறீங்களானு என்று டாக்டர்கள் சிலர் எங்கள் காதுபடவே பேசினர்.

தஞ்சாவூர்: உயிரை பொருட்படுத்தாமல் காப்பாத்தினோம். பாராட்டலாட்டியும் பரவாயில்ல. லேப் முடிவு வர்றதுக்கு முன்னாடியே டிஸ்சார்ஜ் செஞ்சது ஏங்க என்ற வேதனை குரல் தஞ்சை மாநகர் முழுவதும் எதிரொலிக்கிறது. என்ன விஷயம் தெரியுங்களா?
தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி மகப்பேறு பிரிவில் அவசர அறுவை அரங்கம் உள்ள 2வது மாடியில் ஏசியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் சிகிச்சையில் இருந்தவர்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட தற்காலிகப் பணியாளர்கள் 40 பேரும் வேதனை குரல்தான் மேலே கூறியது.
தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவு 2வது மாடியில் வார்டில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வார்டு முழுவதும் புகை சூழ்ந்தது. வார்டில் சிகிச்சையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்த, சிகிச்சையிலிருந்தவர்களின் உறவினர்கள் இதனால் பதற்றமடைந்து அலறினர்.

இந்நிலையில்தான் நாங்கள் இருக்கோம் என்று மருத்துவமனையில் பணியிலிருந்த தற்காலிகப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள், உதவியாளர்கள், செவிலிய பயிற்சி மாணவிகள் ஆகியோர் களமிறங்கி உடனடியாக சிகிச்சையிலிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர்.
தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் பெரும் கரும்புகை சூழ்ந்த நின்ற நிலையில் சிகிச்சையில் இருந்தவர்களை காப்பாற்ற மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்பதும் மறுக்கமுடியாத ஒன்றாகும். இப்படி வார்டில் இருந்தவர்களைக் காப்பாற்றிய தற்காலிகப் பணியாளர்கள் சுமார் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் இவர்களை பற்றி எந்த அதிகாரிகளும் வெளியில் எவ்வித தகவலும் தெரியாத அளவிற்கு பார்த்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த தகவல் வெளியில் தெரிந்த நிலையில் சிகிச்சையில் இருந்தவர்களை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்ததுதான் தற்போது மாநகர் முழுவதும் வேதனைக்குரலாக ஒலித்து வருகிறது. சர்ச்சைக்கும் வழி வகுத்துள்ளது.
இதுகுறித்து சிகிச்சையிலிருந்த பணியாளர்கள் சிலர் வேதனையுடன் தெரிவித்ததாவது: இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு புகை எங்கும் பரவியது. இதனால் அச்சமடைந்த நாங்கள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. மாடியிலிருந்து வீல் சேரில் பெண்களை உட்கார வைத்து அவசர வழியாக தள்ளிக் கொண்டு தரைப்பகுதிக்குப் பாதுகாப்பாக கொண்டு வந்து விட்டோம். அதே போல் குழந்தைகளையும் பாதுகாப்பாக அந்த பகுதியில் இருந்து எவ்வித பாதிப்பும் இல்லாமல் மீட்டோம். கிட்டதட்ட 30 தாய்மார்கள், 24 குழந்தைகள் என 54 நான்கு பேரை மீட்டோம். எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த செயலைச் செய்தோம். புகை இரண்டாவது தளம் முழுவதும் பரவியிருந்ததால் எங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இப்படி ஆண்கள் மற்றும் பெண்கள் என 40 பேர் பாதிக்கப்பட்டோம்.
எங்களை உடனடியாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் கலெக்டர் பேட்டியில் கூறும்போது 2 பேர் மட்டும் பாதிக்கப்பட்டனர் என்று கூறியிருந்தார். இதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதன் பிறகு நாங்கள் சிகிச்சையில் இருப்பதையே வெளியில் தெரியாமல் மறைத்தனர். உயிர் சேதம் ஏற்படாமல் பெரிய அசம்பாவிதத்தைத் தவிர்த்த எங்களை மாவட்ட கலெக்டர் வந்து பார்ப்பார் என்று நினைத்து இருந்தோம். ஆனால் அவர் வந்து பார்க்கவில்லை. அவருக்கு தகவல் தெரிவித்தார்களா என்பது கூட தெரியவில்லை. இதற்கிடையே, உங்களுக்கு உடம்பு நல்லாத்தான் இருக்கு, நிவாரணம் எதுவும் குடுப்பாங்கனு இங்க படுத்து கிடக்குறீங்களானு என்று டாக்டர்கள் சிலர் எங்கள் காதுபடவே பேசினர். பாராட்டி வாழ்த்த வேண்டிய எங்களை வேதனைக்கு ஆளாக்கினர். நாங்கள் சிகிச்சையில் இருப்பது குறித்து தகவல் தெரிந்து பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு தெரிய வந்து வார்டுக்கு வந்தனர். இதனால் திடீரென மருத்துவமனை நிர்வாகம் எங்களைத் டிஸ்சார்ஜ் செய்து விட்டது.
புகையினால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் ரிசல்ட் வந்த பிறகுதான் டிஸ்சார்ஜ் என்றவர்கள் உடனே அவசரமாக எங்களை வீட்டுக்கு அனுப்பியது ஏன். அப்போ நாங்கள் சிகிச்சையில் இருப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகதானே இப்படி செய்துள்ளனர். இது எங்களை அவமானப்படுத்தியது போல் உள்ளது என்று தெரிவித்தனர்.





















