’குறுவை வருமானத்தால்தான் எங்களுக்கு தீபாவளி’- நெல் கொள்முதல் செய்யக்கோரி குமுறும் விவசாயிகள்...!
’’தஞ்சை மாவட்டத்தில் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1.45 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்துள்ளது’’
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் வேளாண்மைத்துறையினர் 1,05,000 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது 1,45,000 ஏக்கர் சாகுபடி நடைபெற்றுள்ளது. குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதை வைத்து, விதை தெளித்து, 30 நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் நாற்றை பறித்து வயல்களில் நடுவார்கள். பின்னர் அதிலிருந்து 130 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் மாதம் இறுதியில் அறுவடை செய்வார்கள். ஆனால் தற்போது ஆறுகளில் தண்ணீர் வந்தும், வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், பெரும்பாலானோர் ஆழ் குழாய் மின்மோட்டாரை கொண்டு சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மின் மோட்டார் தண்ணீரை கொண்டு குறுவை நடவு செய்துள்ளனர். தற்போது அனைத்து நெற்பயிர்களில் உள்ள நெல் மணிகள் முற்றியதால், அதனை அறுவடை செய்து, நேரடி நெல் கொள் முதல் நிலையத்திலுள்ள களத்தில் கொட்டி வைத்துள்ளனர்.
இந்நிலையில், பாபநாசம் தாலுகாக்கா புளியக்குடி, புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் தேங்கி கிடக்கின்றது. இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், விவசாயிகள், இரவு நேரங்களில் நெல் மூட்டைகளை மூடி வைத்து, பகல் நேரத்தில் அடிக்கும் வெயிலில் காயவைக்கின்றனர். இரவு நேரத்தில் திடிரென பலத்த மழை பெய்தால், கொட்டி வைத்துள்ள நெல் மணிகள் அனைத்து முளைத்து பதறாகி விடும்.
எனவே, மாவட்ட நிர்வாகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், ஈரப்பதம் பார்க்காமல் கொள்முதல் செய்ய வேண்டும் என தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து முன்னோடி விவசாயி சீனிவாசன் கூறுகையில், குறுவை சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது குறுவை அறுவடை நடந்து கொண்டிருக்கிறது, கொள்முதல் நிலையம் திறக்கப்படாத பட்சத்தில், அதிகளவில் அறுவடை நடந்து வருவதால் நெல் தேக்கம் அடைகிறது. அறுவடைக்கு ஏற்றார் போல் கொள்முதல் நிலையத்தை திறந்தால், நெல்மூட்டைகள் தேக்கம் அடையாமல் இருக்கும். கொள்முதல் நிலையத்தின் களத்தில் கொட்டி வைத்துள்ள நெல் மூட்டைகள் இரவு நேரத்தில் பெய்யும் மழையால், நெல்மணிகளில் ஈரபதமாகின்றது. அரசு அதிகாரிகள் ஆக்கப்பூர்வமான செயல்முறைகளை நடைமுறைப்படுத்தி நெல் மணிகள் வீண் ஆகாத வகையில் ஒரு புரட்சி நடவடிக்கையாக எடுக்கவேண்டும். பல வருடங்களாக குருவை நேரத்தில் நெல்லின் ஈரப்பதத்தை தளர்த்தி அரசு அந்த சமயத்தில் உத்தரவிட்டு 22% வரை ஈரப்பதமுள்ள நெல் மணிகளை கொள்முதல் செய்து வந்தது. டெல்டா மாவட்டங்களைப் பொருத்தவரை விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் அனைவரும் இந்த குறுவை சாகுபடி வருமானத்தை வைத்துத்தான் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கிறார்கள். ஆகையால் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.
ஆனால் தற்போது பருவநிலை மாறி காலம் தவறி மழை பொழிவதால் பல நேரங்களில் நெல் மணிகள் அதிக ஈரப்பதமாகி விடுகிறது. இதற்கு மாநில அரசு, மத்திய அரசிடம் அனுமதி பெற்று அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தேவையான நேரங்களில் ஈரப்பதத்தை தளர்த்தி கொள்முதல் செய்ய நிரந்தரமாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவடை நேரங்களில் மழை பெய்யும் போதெல்லாம் உத்தரவுக்காக காத்திருந்தால் அதிக அளவில் நெல்மணிகள் சேதமாகிறது விவசாயிகள் பாதிப்படைகிறார்கள் விவசாயிகளுக்கும் அரசுக்கும் அதிக அளவு நஷ்டம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நிரந்தரமாக அனுமதி வழங்கி அரசு உத்தரவிட வேண்டும்.
அதே நேரத்தில் ஓரிரு வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ஆனால் பாபநாசம், திருவையாறு தாலுக்காவில், அறுவடை முடிந்து, ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை, திறக்கப்படாமல் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையத்தின் அருகிலுள்ள களத்தில் கொட்டி வைத்துள்ளார். இதனால், கொட்டி வைத்துள்ள நெல் மூட்டைகளின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. விவசாயிகளுக்கு நடமாடும் நெல் உலர்த்தி எந்திரங்களை கொள்முதல் செய்ய வேண்டும் அல்லது நெல் உலர்த்தும் எந்திரங்களை மற்ற மாநிலங்களில் இருந்து வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் விவசாயிகள் எளிதாக வாங்கும் வகையில் அறுவடை இயந்திரத்திற்கு மானியம் வழங்குவது போல நடமாடும் நெல் உலர்த்தி இயந்திரத்திற்கும் தமிழ்நாடு அரசு பொறியியல் துறை மூலம் அரசு மானியம் வழங்கி உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். எனவே, குறுவை நெல் சேதம் ஆகாத வகைகள், கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும், விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகளை அன்றே கொள்முதல் செய்து விவசாயிகளை பல நாட்கள் காக்க வைக்காமல், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.