பொங்கலோ பொங்கல்... செங்கரும்பு அறுவடையில் விவசாயிகள் மும்முரம்
அரசு கரும்புகளை கொள்முதல் செய்யும் போது சில நிபந்தனைகள் விதிக்கிறது. உயரமான கரும்புகளை மட்டும் எடுத்துக் கொள்கிறது. ஆனால் உயரம் குறைவாக உள்ள கரும்புகளை எடுப்பதில்லை.
தஞ்சாவூர்: கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு தஞ்சை மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கரும்பு அறுவடைப்பணிகள் வெகு மும்முரம் அடைந்துள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதிகளில் அதிக ஏக்கரில் பொங்கல் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடப்பது வழக்கம் மேலும் கரும்பு, வாழை, வெற்றிலை, வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் முக்கிய இடத்தை பொங்கல் கரும்பு பிடிக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி, திருவோணம், வெட்டிக்காடு, மாரியம்மன்கோவில், சாலியமங்கலம், அம்மாப்பேட்டை, கும்பகோணம், கம்பர்நத்தம், மதுக்கூர், குளிச்சப்பட்டு, ராராமுத்திரைக்கோட்டை, வாளமரக்கோட்டை, சூரக்கோட்டை, பாபநாசம் என மாவட்டத்தின் பல பகுதிகளில் பொங்கல் கரும்புகள் நடவு செய்யப்படுவது வழக்கம். இந்த கரும்புகள் 10 மாதம் பயிராகும்.
பொங்கல் கரும்புகள் வழக்கமாக ஏப்ரல் கடைசி வாரம் மற்றும் மே மாதங்களில் நடவு செய்யப்படும். காரணம் இந்த காலக்கட்டத்தில் நடவு செய்தால் தான் ஜனவரி மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதனால் தான் ஏப்ரல் கடைசி வாரத்தில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்வது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் பொங்கல் கரும்புகள் நடவுப்பணிகள் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாக 50 ஏக்கர், 80 ஏக்கரில் மட்டுமே பொங்கல் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
ஆனால் இந்தாண்டு மாவட்டம் முழுவதும் 108 ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு அறுவடைப் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக இந்தாண்டு தஞ்சாவூர் 25 ஏக்கர், திருக்காட்டுப்பள்ளி 20 ஏக்கர், திருவிடைமருதூர் 15 ஏக்கர், திருப்பனந்தாள் 20 ஏக்கர் என மொத்தமாக 80 ஏக்கரில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருபுறம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மறுபுறம் பேராவூரணி 6 ஏக்கர், ஒரத்தநாடு 6 ஏக்கர், மதுக்கூர் 5 ஏக்கர், கும்பகோணம் 5 ஏக்கர், திருவோணம் 6 ஏக்கர் என மொத்தமாக 28 ஏக்கரில் குறைந்த அளவில் கரும்பு சாகுபடி நடந்துள்ளது. இருப்பினும் இந்தாண்டு 108 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் கரும்புகள் வரை கிடைக்கும். இதில் 12 ஆயிரம் கரும்புகள் சிறந்தவையாக இருக்கும். அரசு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதில் கரும்பும் இடம் பிடித்துள்ளது. இதனால் விவசாயிகளிடம் இருந்து அரசு கரும்புகள் கொள்முதல் செய்வதும் நடந்து வருகிறது. பல விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள கரும்புகளை பிற மாவட்ட வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், அரசு கரும்புகளை கொள்முதல் செய்யும் போது சில நிபந்தனைகள் விதிக்கிறது. உயரமான கரும்புகளை மட்டும் எடுத்துக் கொள்கிறது. ஆனால் உயரம் குறைவாக உள்ள கரும்புகளை எடுப்பதில்லை. வியாபாரிகள் அனைத்தையும் கலந்து எடுத்துக் கொள்கின்றனர். அதனால் நேரடியாக வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறோம். எனவே வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறோம் என்றனர்.
வேளாண்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்த அளவிலேயே இருந்தது. அதற்கு முன்பு 200 ஏக்கர் வரை கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் 50 முதல் 80 ஏக்கர் வரை மட்டுமே கரும்பு சாகுபடி நடந்துள்ளது. ஆனால் இந்தாண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 108 ஏக்கரில் கரும்பு சாகுபடி நடந்துள்ளது. தற்போது அறுவடை பணிகள் ஆங்காங்கே நடந்து வருகிறது என்றனர்.