தஞ்சாவூர்: திருபுவனம்-வேப்பத்துார் பாலம் சேதம் - 10 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் பொதுமக்கள்
’’மரப்பாலத்தில் நடந்து செல்லும் பலகைகள் பெயர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. வேறு வழியில்லாமல் அக்கிராம மக்கள் அந்த பாலத்தில் வழியாக சென்று வரும் அபாய நிலை இருக்கின்றது’’
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்டம், வேப்பத்துார் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமத்தில் இருந்து, திருபுவனத்திற்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள், விவசாயிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் சென்று வருவார்கள். வேப்பத்துாரில் இருந்து கும்பகோணத்திற்கோ அல்லது மயிலாடுதுறைக்கோ செல்ல வேண்டுமானால் சுமார் 10 கிலோ மீட்டர் துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருப்பதால், அப்பகுதி பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பல ஆண்டுகளுக்கு முன்பு வேப்பத்துார்-திருபுவனம் இணைக்கும் காவிரி ஆற்றில் சிமெண்டினாலான காங்கீரிட் பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலத்தை அனைத்து மக்களும் பயன்படுத்தி வந்தனர். பின்னர் பாலம் சிதிலமடைந்து, சிமெண்ட் காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருந்ததால், பாலத்தை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அப்பாலத்தின் அருகிலேயே மரத்தினாலான பாலத்தை அமைத்தனர். கிராம மக்கள், அனைவரும் வாகனம் மற்றும் பாதசாரிகளாக அந்த மரப்பாலத்தில் சென்று வருவதால், பாலம் மிகவும் மோசமாகவும், நடைபாதையிலுள்ள பலக்கைகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கின்றது. தற்போது பலத்த மழை பெய்து வரும் நிலையில், பொது மக்கள், மாணவர்கள், சென்று வரும் போது, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலோ அல்லது மழையின் போது காற்று வீசி மரப்பாலம் சரிந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்படும். எனவே, வேப்பத்துார் கிராம மக்களின் நலன் கருதி, உடனடியாக காவிரியாற்றிலுள்ள மரப்பாலத்தை தற்காலிகமாக சீர் செய்து, உடனடியாக தரமான உயர்மட்ட பாலத்தை கட்டித்தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், திருவிசைநல்லூர், வேப்பத்தூர்,அம்மன்பேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து, திருபுவனம் சென்று வர பொதுமக்கள் இந்த பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர். மாற்றுப்பாதையில் சென்று வரவேண்டும் என்றால், கூடுதலாக 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. அக்கிராமத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி, கல்லுாரி மாணவர்கள், திருபுவனத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதே போல் வேலைக்கு செல்பவர்களும் திருபுவனத்திற்கு சென்று பஸ் பிடித்து செல்ல வேண்டியிருப்பதால், இப்பாலம் மிகவும் அத்தியாவசியமாகி உள்ளது.
இங்குள்ளவர்களுக்கு ஏதேனும் உடல் பாதைகள் ஏற்பட்டால், மருத்துவமனைக்கோ அல்லது மருந்து கடைகளுக்கோ செல்ல வேண்டுமானால், இப்பாலத்தில் சென்று வரவேண்டியிலுள்ளது.தற்போது மரப்பாலம் போடப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில், மிகவும் மோசமான நிலையிலுள்ளது. நடந்து செல்லும் போதே மிகவும் ஆபத்தான நிலையில் ஆடிக்கொண்டிருக்கின்றது. பள்ளி மாணவர்கள், சைக்கிளில் சென்று வரும் போது, நிலை தடுமாறி பக்கவாட்டில் விழுந்து, ஆற்றிலுள்ள தண்ணீர் அடித்து செல்லும் நிலை ஏற்படும். மரப்பாலத்தை கடக்கும் போது, அனைவரும் உயிரை கையில் பிடித்து கொண்டு பயத்துடன் கடக்கின்றனர்.
இந்நிலையில் மரப்பாலத்தில் நடந்து செல்லும் பலகைகள் பெயர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. வேறு வழியில்லாமல் அக்கிராம மக்கள் அந்த பாலத்தில் வழியாக சென்று வரும் அபாய நிலை இருக்கின்றது. மரப்பாலத்தில் தங்களது உயிரை வைத்து பணயம் வைத்து சென்று வரும் பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் நாள்தோறும் இப்பாலத்தின் வழயே சென்று வருகின்றனர். பலத்த காற்றோ அல்லது கடுமையான மழை பெய்தாலோ, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலோ, மரப்பாலம் சரிந்து விழும் நிலையில் உள்ளது.எனவே, மரப்பாலத்தால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு வேப்பத்துார்- திருபுவனம் இணைக்கும் காவிரி ஆற்றில் மரப்பாலத்திற்கு பதிலாக சிமெண்ட் கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும் என்றனர்,