கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் - பரிசை தட்டிச்சென்ற அதிமுக முன்னாள் எம்.பி ப.குமார்
’’நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் செய்த கரும்பு விவசாயிகள் 8 பேருக்கு சிறந்த விவசாயி விருது வழங்கப்பட்டது’’
தஞ்சாவூர், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்குட்பட்ட விவசாயிகளில், கடந்த ஆண்டு, கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் மற்றும் ஆலைக்கு அதிகளவில் சப்ளை செய்த விவசாயிகள் 8 பேருக்கு சிறந்த விவசாயிகள் என பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லுாரி, குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை இணைந்து, கரும்பு சாகுபடியில் புதிய தொழில்நுட்பமாக இயந்திரபயன்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கரும்பு சாகுபடிக்கான வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துக்கள் குறித்த கண்காட்சியினை, வேளாண்மை கல்லுாரி முதல்வர் அ. வேலாயுதம், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி எஸ்.செல்வசுரபி, வேளாண்மை இணை இயக்குநர் ஜஸ்டின் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். கரும்பு சாகுபடி தொழில் நுட்ப கண்காட்சியில் 20க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டு கரும்பு சாகுபடியில் புதிய தொழில் நுட்ப இயந்திரங்களை காட்சிப்படுத்தியும் நேரடி செயல் விளக்கம் அளித்தன.
தொடர்ந்து, 2020–21ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவத்தில் ஒரு ஏக்கரில் அதிகபட்ச மகசூல் ஈட்டிய, தங்கப்பஉடையான்பட்டியை சேர்ந்த வி.கந்தவேல், அரியானிபட்டியை சேர்ந்த கே.ராஜேந்திரன், பகட்டுவான்பட்டியை சேர்ந்த ஆர்.சதாசிவம், முதலிபட்டியை சேர்ந்த ஜி.ராமையன் ஆகியோருக்கும், ஒரு ஏக்கரில் தனது பெயரில் அதிக டன்கள் சப்ளை செய்த, விளாரை சேர்ந்த எஸ்.முருகேசன், புனல்குளத்தை சேர்ந்த ப.குமார், நாயக்கர்பட்டியை சேர்ந்த எஸ்.அப்துல் அஜிஸ், பி.புண்ணியமுர்த்தி ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் அதிக டன் சப்ளையில், முன்னாள் எம்பியும், அதிமுக., திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமாருக்கு சிறந்த விவசாயிக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. அவரின் பரிசை குமார் மனைவி காயத்ரி பெற்றுக்கொண்டனர். பின்னர், விழாவில் சிறப்புரையாற்றிய, வேளாண்மை கல்லுாரி முதல்வர் வேலாயுதம் பேசுகையில்; சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் முதல் முறையாகப் பயிரிடப்பட்டதுதான் இந்த கரும்பு. இந்தியாவில் கி.மு. 500 ஆம் ஆண்டில்தான் கரும்பு அறிமுகம் செய்யப்பட்டது. உலகில், 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 20 மில்லியன் ஹெக்டேர்களில் வணிகப் பயிராக கரும்பு பயிரிடப்படுகிறது. கரும்பு பொருள் ஏற்றுமதியில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் வெறும் 5 மில்லியன் ஹெக்ரில் கரும்பு சாகுபடியில், 400 மில்லியன் டன் கிடைக்கிறது. தமிழகத்தில் 2 லட்சம் ஹெட்ரில், 7.5 லட்சம் டன் உற்பத்தி செயய்யப்படுகிறது. இப்படியாக கரும்பு உற்பத்தியில் அதிக லாபம் பெற சொட்டு நீர் முறை, இயந்திரங்களை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றார்.
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி செல்வசுரபி பேசுகையில், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 ஆயிரம் ஏக்கர் அளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அது குறைந்துள்ளது. இதற்கு அரவை உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சிக்கல் இருக்கிறது, அதை மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் நடவு முதல் அறுவவை ஏற்படும் ஆள் பாற்றக்குறை மற்றொரு புறம் பெரிய சவாலாக உள்ளது. இதை மாற்ற விவசாயிகள் கூட்டு பண்ணை திட்டம் மூலம் இயந்திரங்களை அதிகளவில் பயன்படுத்தினால், அதிக லாபத்தை பெற முடியும். பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டது. கரும்பு விவசாயிகள் முழுமையாக அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து, வேளாண் செயற்பொறியாளர் ஏ.ஏ.செல்லக்கண்ணு ஞானதேசிகன், எஸ்.அய்யம்பெருமாள், வேளாண்மை துணை இயக்குநர் உள்ளிட்டோர் பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து கருத்துகளை வழங்கினர். இதில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக்கொண்டனர். முன்னதாக அபிவிருத்தி அலுவலர் ராமு அனைவரையும் வரவேற்றார். இறுதியில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர் துரைராஜ் நன்றி கூறினார்.