(Source: ECI/ABP News/ABP Majha)
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் தற்காலிக ரவுண்டானா அமைப்பு
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் ஏற்கெனவே உள்ள ரவுண்டானாவில் ஒரு பகுதி இடிக்கப்பட்டு புதிதாக தற்காலிக ரவுண்டானா அமைக்கப்பட்டது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் ஏற்கெனவே உள்ள ரவுண்டானாவில் ஒரு பகுதி இடிக்கப்பட்டு புதிதாக தற்காலிக ரவுண்டானா அமைக்கப்பட்டது. விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் விதத்தில் வாகன ஓட்டுனர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை நகர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தஞ்சையின் முக்கிய வீதியான காந்திஜி சாலையில் 1934ல் ஆங்கிலேயர் காலத்தில் கல்லணை கால்வாய் அமைக்கும் போது, கட்டப்பட்ட இர்வின் பிரிட்ஜ் என அழைக்கக் கூடிய ஆற்றுபாலம் இடிக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில், மாநில நெடுஞ்சாலை துறை வாயிலாக 3 கோடி ரூபாயில் புதிய பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பாலம் இடிக்கக் கூடிய பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தஞ்சை நகர பகுதியில் உள்ள முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காந்தி சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் காந்திஜி சாலையில் செல்ல கூடிய பேருந்துகள் அனைத்தும் பெரிய கோயில் வழியாக சென்று வந்தன. அதேபோல் தஞ்சையின் நகரை இணைக்கும் கரந்தை- வடவாறு வடவாற்று பாலம் இடிக்கப்பட்டு 3 கோடி ரூபாயில் புதிய பாலம் கட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டவுடன் மீண்டும் பழைய படியே போக்குவரத்து சென்று வந்தது. இருப்பினும் இர்வின் பாலம் அகலப்படுத்தி ஒருபுறம் இரு பிரிவாக பிரிக்கப்பட்டது. இதில் போக்குவரத்து சென்று வந்தாலும் தஞ்சாவூர் காந்தி - இர்வீன் ஆற்றுப்பாலம் அருகே காந்திஜி சாலை - நீதிமன்றச் சாலை சந்திப்பில் கடக்கும்போது வாகன ஓட்டுநர்களிடையே குழப்பம் நிலவி வந்தது.
இதனால், அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வந்ததால், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே நீதிமன்றச் சாலை நுழைவு பகுதியில் இடது புறம் இருந்த ரவுண்டானா முழுவதுமாகவும், வலது புறம் நினைவுத் தூணுடன் கூடிய ரவுண்டானாவில் ஒரு பகுதியும் கடந்த வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் புதிதாக தற்காலிக ரவுண்டானா அமைக்கப்பட்டது. இந்த தற்காலிக ரவுண்டானா சில நாள்களுக்கு தொடரும் என்றும், இதிலுள்ள நிறை, குறைகளை அறிந்து நிரந்தரமான ரவுண்டானா அமைக்கப்படும் என போக்குவரத்து ஒழுங்கு காவல் பிரிவினர் தெரிவித்தனர். ரவுண்டானாவாக இருப்பதால் இருபுறத்தில் இருந்தும் வாகனங்கள் வருவது தெளிவாக தெரிவதாக வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.