மயிலாடுதுறை : சொந்த செலவில் ஸ்மார்ட் டிவி.. தெருத்தெருவாக சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்
அரசு பள்ளி மாணவர்களின் கல்வி பாதித்துவிடக்கூடாது என்பதற்காக சொந்த செலவில் ஸ்மார்ட் டிவி அமைத்து பாடம் நடத்திவரும் ஆசிரியரை பெற்றோர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கிய நாள் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைய வழியிலேயே பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரிகளுக்கு மட்டும் இணை வழியில் தேர்வுகள் நடத்தப்பட்டும் வருகிறது. இந்த சூழலில், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த முடியாத சூழல் இருப்பதால், அனைவரும் தேர்ச்சி என அரசுகள் அறிவித்தது. இருந்தபோது மாணவர்களின் கல்வி முற்றிலுமாக பாதித்துவிடக் கூடாது என்பதற்காக இணையவழியில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக பாடம் எடுத்து வருகின்றன
ஆனால் தனியார் பள்ளிகள் போன்று அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் என்பது எட்டாக்கனியாக உள்ளது. இருந்த போதிலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக அரசு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் பாடம் வாரியாக தேதி, நேரம் ஒதுக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சீர்காழியை அடுத்த நிம்மேலி நெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்கும் சூழலில், இவர் பணிபுரியும் பள்ளியில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் அக்கல்வி கற்க முடியாமல் இருப்பதை எண்ணி மனம் வருந்தியதால், அவர்களுக்கும் கல்வி முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதாக மாணவர்களுக்கு அரசின் கல்வித் தொலைகாட்சி வாயிலாக நடத்தப்படும் பாடங்கள், பல வீடுகளில் ஏழ்மையின் காரணமாக டிவிக்களுக்கு பணம் கட்டமாலும், பல வீடுகளில் டிவி இன்றியும், பெற்றோர்கள் விவசாயப் பணிகளுக்கு சென்று விடுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவதை போக்க ஆசிரியர் சீனிவாசன் கடந்த சில மாதங்களாக தனது சொந்த செலவில் நடமாடும் ஸ்மார்ட் டிவி மூலம் மாணவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று பாடங்களை நடத்தி வருகிறார்.
இதற்காக ஆசிரியர் சீனிவாசன் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்றையும், அதனுடன் ஸ்பீக்கர், இணையவசதி மோடம், பென்டிரைவ் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வாங்கி மூன்று சக்கர சைக்கிளில் பொருத்தி கிராமத்தில் உள்ளே எடுத்து சென்று பல்வேறு இடங்களில் வைத்து மாணவர்களை ஒன்றிணைத்து ஸ்மார்ட் டிவியில் கல்வி தொலைக்காட்சியை ஒளிபரப்பு செய்து மாணவர்களை பார்க்க வைத்தது, அதில் ஏற்படும் சந்தேகங்களை நேரடியாக தீர்த்து பாடம் நடத்தி வருகிறார். இதனை கண்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி கற்க முடியாமல் உள்ள சூழலில் இந்த ஆசிரியரின் செயல் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்
இது குறித்து ஆசிரியர் சீனிவாசன் கூறுகையில், ”அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நேரடித்தொடர்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, கல்வித் தொலைக்காட்சியை அனைத்து மாணவர்களை அவசியம் பார்க்க வைக்க வேண்டும் மேலும் அதில் உள்ள பாடம் சார்ந்த சந்தேகங்களை தீர்க்க வேண்டும், என்ற எண்ணத்தில், நானும், சக ஆசிரியர்களும் சேர்ந்து இதனைச்செய்து வருகிறோம் என்றார். ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டி தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.