(Source: ECI/ABP News/ABP Majha)
தமிழக அரசு ஆன்மீக அரசாக செயல்படுகிறது - தருமபுரம் ஆதீனம் புகழாரம்
தருமபுர ஆதீன கல்லூரி 75-ம் ஆண்டு பவளவிழா நிறைவு முப்பெரும்’ விழாவில் பல்வேறு கோயில் கும்பாபிஷேகங்களை நடத்தி வரும் தமிழக அரசு ஆன்மிக அரசாக செயல்படுவதாக தருமபுரம் ஆதீனம் புகழாரம் சூட்டி பேசியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் சைவத்தையும் தமிழையும் பரப்பும் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இவ்வாதீனத்தால் மயிலாடுதுறையில் 1946 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்கல்லூரி கலைக்கல்லூரியாக வளர்ச்சியடைந்த தருமபுர ஆதீன கலைக்கல்லூரி 75-ம் ஆண்டு பவள விழா ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. பவளவிழா நிறைவு நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக நேற்று மாலை கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
கல்லூரிக்கு வந்த முதலமைச்சருக்கு பூர்ண கும்பம் மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நினைவு பரிசை வழங்கி ஐந்தரை பவுன் தங்க செயின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழுத்தில் தருமபுரம் ஆதீனம் பரிசாக அணிவித்தார். தொடர்ந்து தருமை ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்து ஆசியுரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில், 26 -வது குருமகா சந்நிதானம் அருளாட்சி காலத்தில் நடைபெற்ற வெள்ளிவிழாவில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி, பொன்விழாவில், அன்றைய கல்வித்துறை அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், உள்ளாட்சித் துறை அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பவளவிழாவில் தற்போதைய முதல்வர் பங்கேற்றதில் மகிழ்ச்சி. தருமையாதீனக் கல்லூரியில் ஒவ்வொரு 25 ஆண்டுக்கும் கழக ஆட்சி அமைந்திருக்கிறது. நூற்றாண்டு விழாவின்போதும் திமுக ஆட்சியே நடக்கும். திருச்செந்தூரில் ஆதீனத்தின் சொத்துக்கள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டதை திமுக ஆட்சியில் விரைவாக மீட்டுள்ளோம். தற்போதைய ஆட்சியில் நீண்டகாலங்களாக கும்பாபிஷேகம் நடத்தப்படாத பழைமையான பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், 80க்கும் மேற்பட்ட கிராமக் கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கியதோடு, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்கிறார்.
நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதனை முதல்வர் செய்து தருகிறார். முத்துவேலனார், கருணாநிதி, தற்போதைய முதல்வர், அவரது மகன் என நான்கு தலைமுறைகளாக முதல்வர் குடும்பம் தருமபுரம் ஆதீனத்துடன் தொடர்பில் இருக்கிறது" என்றார்.
இதைத்தொடர்ந்து, கல்லூரியின் 75 -ஆம் ஆண்டு பவள விழா மலர், தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் எழுதப்பட்ட திருக்குறள் உரை விளக்கத்தின் மறு பதிப்பு ஆகியவற்றை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தருமை இணையதள தொலைக்காட்சி மற்றும் வானொலியின் ஒளி, ஒலி பதிவரங்கத்தை திறந்து வைத்து விழா பேருரையாற்றாற்றினர்.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற நிலை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, திமுக டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், கல்லூரி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.