விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் இறால் பண்ணைகள்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தஞ்சை கலெக்டரிடம் புகார்
விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இயங்கி இறால் பண்ணைகள் :குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இயங்கி இறால் பண்ணைகள் :குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
நன்னீரை பயன்படுத்தும் இறால் பண்ணைகள்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மரக்காவலசை கிராமப் பகுதியில் செயல்பட்டு வரும் இறால் வளர்ப்பு பண்ணைகள், இறால் வளர்ப்புக்கு கடல் நீரைப் பயன்படுத்தாமல், சட்ட விரோதமாக, வணிக ரீதியாக இறால்களை வளர்ப்பதற்கு நன்னீரைப் பயன்படுத்தும் விதமாக, ராட்சத ஆழ்குழாய்கள் மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சிப் பயன்படுத்தி வருகின்றன. இதனால் இந்தப் பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் சூழ்நிலை உள்ளது.
தண்ணீர் இன்றி பாதிப்புக்குள்ளாகும் மனிதர்கள்
மனிதர்கள் மற்றும் கால்நடைகள் தண்ணீர் இன்றி மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பணிகள் நடைபெறும் என்பதால் நீர்மட்டம் குறைவு ஏற்படுவதன் காரணமாக இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமான ஒட்டுமொத்த விவசாயமும் முற்றிலுமாகப் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, இறால் வளர்ப்பு நிறுவனங்கள் எந்த விதமான விதிமுறைகளையும் மதிக்காமலும், நீர்வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஊராட்சி மன்றம் உள்ளிட்ட எந்த அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மேற்கண்ட இறால் பண்ணை நிறுவனங்களை அகற்ற ஏபமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோத இறால் பண்ணைகள்
மேலும், தொகுதி சட்டமன்ற உறுப்பினர், ஒன்றியப் பெருந்தலைவர், மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், இந்தப் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளனர். இதுவரை அந்த சட்ட விரோத இறால் பண்ணைகள் நீரை திருடும் பணியை நிறுத்தவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உடன் தலையிட்டு இந்தப் பகுதியை அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்
பூதலூர் தாலுகா, செங்கிப்பட்டி பகுதி உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், புதிய உயர்மட்ட கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம், 83 ஏரிகள் பாசனம் பெற்று விவசாயம் நடைபெறுகிறது. இந்த இரண்டு வாய்க்கால்களும் திருச்சி ஆற்றுப் பாசன கோட்டத்தின் பராமரிப்பில் உள்ளது. கடந்த ஆண்டு தண்ணீர் வந்த போதும் ஒரு சொட்டு நீர் கூட தஞ்சை மாவட்டத்தின் பகுதிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் முற்றிலும் வறட்சி பாதிப்பால், இந்தப் பகுதி விவசாயிகள் தவித்து வருகிறார்கள். இவ்வளவு வறட்சி ஏற்பட்டும், இதுவரை கடந்த பல ஆண்டுகளாக தூர் வாரும் பணி ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. குமிழிகள், கால்வாய்கள் மிகவும் சேதம் அடைந்து கிடந்தாலும் இதுவரை மராமத்து பணிகள் ஏதும் நடைபெறவில்லை. எனவே, இந்த ஆண்டு அவசரம் கருதி உடன் தூர்வாரும் பணியையும், குமிழிகள் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு, துரிதமாக இப்பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கவும் இந்த ஆண்டு விவசாயத்தை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.