‘அரக்கன் போல் செயல்படும் ரெட் ஜெயண்ட் நிறுவனம்’ - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
ரெட் ஜெயண்ட் நிறுவனம் சொன்னால் தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். ஒரு சர்வாதிகாரம் போல் செயல்பட்டு கொண்டிருகிறார்கள். இதற்கு விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
"ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கருணாநிதி குடும்பம் ஆக்டோபஸ் போல் மாறிவிடுகிறது. அனைத்து துறைகளிலும் நுழைந்து விடுகிறது. இதில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அரக்கனாக செயல்பட்டு வருகிறது. இவர்கள் சொன்னால் தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். ஒரு சர்வாதிகாரம் போல் செயல்பட்டு கொண்டிருகிறார்கள். இதற்கு விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்" என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தலுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முத்திரை பதிக்கும். பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அமமுக சிறப்பாக பணியில் ஈடுபடும்.
தலையில்லா முண்டமாக அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒரு புறமும், பன்னீர்செல்வம் ஒருபுறமும் பிரிந்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரை தான் இந்த கட்சி தலைவராக தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது. தற்போது இது செயல்படாத இயக்கமாக உள்ளது. நான்கு மாதத்திற்குள் பொதுச் செயலாளர் தேர்தல் வைக்காததால் அவர் இடைக்கால பொதுச் செயலாளர் என்று சொல்வது தவறு.
பழனிச்சாமி இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று சுயநலத்தோடு செயல்படுகிறார். இரட்டை இலையே செயல்படாமல் இருக்கிறது. உடன் இருந்து ஆட்சியை காப்பாற்றிய பன்னீர்செல்வத்தையே எடப்பாடி பழனிச்சாமி வெளியேற்றி இருக்கிறார். வேறு வழி இல்லாமல் பன்னீர்செல்வம் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த கட்சியின் எதிர்காலமே நீதிமன்றத்தின் கையில் உள்ளதற்கு பழனிச்சாமி தான் காரணம்.
திமுக வழக்கு ஏதும் தொடர்ந்து விடக்கூடாது என்பதற்காக தன் கட்சியை அழிக்கிற நிலைக்கு சென்று விட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பலவீனப்படுத்துவது திமுகவிற்கு தான் லாபமாக அமையும். தன் மீது திமுக எந்த வழக்கும் போட்டு விடக்கூடாது என்பதற்காக பழனிசாமி இறங்கி உள்ளார். துரோகம், சுயநலம் என எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். எனவே எடப்பாடி பழனிசாமிக்கு வீழ்ச்சி ஏற்பட்டால் அதிமுகவிற்கும் தமிழகத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நல்லதாக அமையும்.
அவருக்கு ஒரு வீழ்ச்சி வந்தால் இயக்கத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் நல்லதொரு முடிவாக இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் போது பன்னீர்செல்வத்தை சந்திப்பேன். கருணாநிதி குடும்பம் தமிழகத்திற்கு ஆட்சிக்கு வந்தவுடன் ஆக்டோபஸ் போன்ற அனைத்து துறைகளிலும் தங்கள் குடும்பம் தான் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தற்போது அது போன்று தான் நடந்து வருகிறது. திரைப்பட தயாரிப்பாளர்கள் திமுகவின் குடும்பம் கூறுவதைப் போலத்தான் திரைப்படங்களை வெளியிட வேண்டும் என சர்வாதிகாரம் செய்து வருகின்றனர். உண்மையிலேயே ஜெயின்ட் என்ற அரக்கன் போல தான் செயல்படுவதாக கூறி வருகின்றனர். இதற்கான நல்லதொரு முடிவை காலம் தரும். பழனிசாமி ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூறிய போது நான் ஆதரவு தெரிவித்ததற்கு காரணம், சுயநலமோ, எங்களுக்கு துரோகம் செய்துவிட்டாரோ என்பதோ கிடையாது. எடப்பாடி பழனிசாமி கையில் ஆட்சி இருந்தால் அதிமுகவை அழித்துவிடுவார் என்பதற்கு தான். நான் அதிமுகவை மீட்டெடுப்பேன் என கூறிய நிலையில் அது தானாகவே நடந்து விடும். எடப்பாடி பழனிசாமி தோளில் தூக்கி வைத்து இருந்தவர்கள், கீழே போட்டு மிதிப்பதற்கான காலமும் விரைவில் வரும்" என்றார்.