தஞ்சாவூர் அரண்மனையில் வரும் 12ம் தேதி சித்தி(ரை)ர சந்தை... வாங்க... வாங்க!!!
சித்திரை மாதத்தின் முதல் நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சந்தை, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தினமும் காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் “சித்தி(ரை)ர சந்தை” - ஓவியங்களின் சிறப்பு கண்காட்சி விற்பனை வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலிலும், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பிலும், ஓவியக்கலைக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கில் “தஞ்சாவூர் சித்தி(ரை)ர சந்தை” எனும் ஓவியக் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு 12.04.2025 முதல் 14.04.2025 வரை நடைபெற உள்ளது.
சித்திரை மாதத்தின் முதல் நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சந்தை, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தினமும் காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும். இந்த சந்தை ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான ஓவியங்களைப் பார்த்து ரசிக்கும் வகையிலும், சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்த ஓவியச் சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தலைசிறந்த ஓவியர்கள் முதல் வளர்ந்து வரும் கலைஞர்கள் வரை 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். வண்ண ஓவியங்கள், அழகிய சிற்பங்கள், கணினி ஓவியங்கள் என 10,000க்கும் மேற்பட்ட படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளன.
மேலும், சந்தையின் சிறப்பம்சமாக, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களை ஊக்குவிக்க ஓவியப் போட்டி, காட்சிக்கலைப் போட்டி, ஓவியப் பயிலரங்கம், ஓவியப் பேச்சரங்கம், ஓவியப் பிரதிமை, சிற்ப வடிவமைப்பு , சுவர் ஓவியங்கள் மற்றும் பல கலாசார நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. இந்த அரிய வாய்ப்பைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக் கொண்டு, கலைஞர்களின் படைப்புகளை பார்வையிட்டு, மகிழ்ந்து, வாங்கிச் சென்று அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர். முத்துக்குமார்,அரசு கவின்கள் கல்லூரி, கும்பகோணம் முதல்வர் (பொறுப்பு) ரவி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

