(Source: Matrize)
நகர மன்ற தலைவரை முற்றுகையிட்ட வார்டு உறுப்பினர்கள்... பரபரப்பான சீர்காழி நகர்மன்ற கூட்டம்..!
சீர்காழி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் நகர மன்ற தலைவரை முற்றுகையிட்டு வார்டு உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் நகர மன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகன மேடை டெண்டர் மன்ற பொருளாக வைக்கப்பட்டது. மன்றத்தில் சம்பந்தப்பட்ட எரிவாயு தகன மேடை டெண்டர் படிக்க ஆரம்பித்த பொழுது வார்டு உறுப்பினர்கள் சிலர் ஏற்கனவே டெண்டர் எடுத்து கடந்த ஏழு ஆண்டுகளாக நடத்தியவருக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று ஒரு தரப்பு வார்டு உறுப்பினர்களும், ஏற்கனவே டெண்டர் எடுத்து நடத்தியவரிடம் மேலாளராக வேலை பார்த்த பாபு என்பவருக்கு வழங்க வேண்டும் என்றும் ஒரு தரப்பு வார்டு உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் அடுக்கடுக்கான புகார்களை கூறிக்கொண்டு நகரமன்ற தலைவர் இருக்கையின் அருகே சென்று அவரை முற்றுகையிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மன்றத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரம் நீடித்த வார்டு உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் மன்ற கூடத்தில் போர்க்களம் போல் காட்சியளித்தது. ஒரு வழியாக வார்டு உறுப்பினர் சமாதானப்படுத்திய நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கூறினார்.
அதனைத் தொடர்ந்து, 24 வார்டுகள் உள்ள சீர்காழி நகராட்சியில் வார்டு உறுப்பினர்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பெரும்பான்மையாக ஏற்கனவே டெண்டர் எடுத்து நடத்தியவர், எரிவாயு தகனமேடை டெண்டர் கூறியதில் குறைந்த தொகைக்கு டெண்டர் கோரி இருந்தால், காமராஜர் மக்கள் நல சேவைக்கு டெண்டர் வழங்கப்படுவதாக முடிவு செய்து தலைவர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வார்டு உறுப்பினர்கள் 9 பேர் மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இச்சம்பவத்தால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. திமுக நகர் மன்ற தலைவரின் முடிக்கு திமுகவை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், சீர்காழி நகராட்சி நகர்மன்ற கூட்டத்திலும் தொடர்ந்து கடும் விவாதத்திற்கும் மத்தியில், பல வார்டு உறுப்பினர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் நகர மன்ற கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதத்தில் ஈடுபடும் வார்டு உறுப்பினர்களின் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக வார்டு உறுப்பினர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
IND vs PAK: 36 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ரோகித்... என்ன சாதனை தெரியுமா?