Accident: சீர்காழி அருகே அரசு பேருந்து கார் மீது மோதி விபத்து - கார் ஓட்டுநர் உயிரிழப்பு
சீர்காழி அருகே அரசு பேருந்து கார் மீது மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் காரில் பயணித்த மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலை விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழி சாலைக்கான விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல விபத்துகளும் அதன் மூலம் உயிரிழப்புக்களும் நடந்தேறி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே சீர்காழி அருகே புத்தூரை சேர்ந்த 35 வயதான சிவபாலன் மற்றும் அவரது மூன்று நண்பர்களான சக்திவேல், தனசீலன், பாலமுருகன் உள்ளிட்ட 4 பேரும் புத்தூரில் இருந்து சீர்காழி நோக்கி காரில் வந்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது எருக்கூர் மாதா கோவில் அருகே வந்த கார் மீது அரசு பேருந்து பலத்த வேகத்துடன் மோதியுள்ளது. இதில் கார் சாலை ஓரம் தூக்கி வீசப்பட்டது, அரசு பேருந்தும் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலை ஓரம் வயலில் இறங்கியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சிவபாலன் காரின் உள்ளே சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் பலத்த காயமடைந்த மற்ற மூன்று பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 வாகனம் மூலமாக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைக்கு பிரிவினரின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த கார் ஒட்டுனர் சிவபாலன் காரின் உள்ளே மாட்டி கொண்டதால் உடலை மீட்க முடியாமல் பாரையால் கார் கதவை உடைத்து இரண்டு மணி நேரம் போராடி அப்பகுதி இளைஞர்கள் உடலை மீட்டனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த ஆணைக்காரன் சந்திரம் காவல்துறையினர், சீர்காழி தீயணைப்பு துறையினரின் உதவியுடன் விபத்தில் சிக்கி போக்குவரத்துக்கு இடையூராக இருந்த காரை மீட்டு போக்குவரத்தை சரி செய்து விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் தப்பி ஓடிய அரசுபேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.






















