காரைக்காலில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1,000 லிட்டர் சாராயம் பறிமுதல்
’’ஏற்கெனவே கடந்த 13ஆம் தேதி காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட 5,000 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர்’’
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை காலங்களில் அண்டை புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து புதுச்சேரி சாராயம் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்து சாராய வியாபாரிகள் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளி மாநில சாராய விற்பனையை தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மயிலாடுதுறை அடுத்த பெரம்பூர் அருகே காருகுடி என்ற இடத்தில் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வேகமாக வந்த சொகுசு காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த சொகுசு காரில் மூட்டை, மூட்டையாக பாண்டி சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதனையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது, செம்பனார்கோவிலைச் சேர்ந்த 44 வயதான குமார் என்பதும், இவர் மயிலாடுதுறை அருகில் தனியூர் என்ற இடத்தில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்து காரைக்காலில் இருந்து சாராயத்தை வாங்கி வந்து பிளாஸ்டிக் பாக்கெட்களில் அடைத்து சில்லரை விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
Gold-Silver Price, 15 Jan: விலையில் இன்று சரிவு... சென்னையில் இன்று தங்கம், வெள்ளி நிலவரம்!
இதையடுத்து குமாரை கைது செய்த தனிப்பட்ட காவல்துறையினர், சாராயம் மற்றும் காரினை பறிமுதல் செய்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வத்திடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார் மற்றும் சாராயத்தின் மதிப்பு 13.20 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் கூறுகையில் மாவட்ட முழுவதும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாகவும், இதனால் கள்ளச்சாராயம் விற்பனை முற்றிலும் நடைபெறாமல் தடுக்கப்படும் என்றனர். மேலும் கடந்த 13ஆம் தேதி மயிலாடுதுறை அருகே வாகன தணிக்கையின் போது காரில் கடத்தி வரப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளையும் வாகனங்களையும் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.