கொரோனா அறிகுறி சடலம்: போலீஸ் எதிர்ப்பை மீறி ஆட்டோவில் ஏற்றிச் சென்ற உறவினர்கள்!
மயிலாடுதுறையில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் உயிரிழந்தவரின் உடலை, போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஆட்டோவில் வீட்டுக்கு எடுத்துச் சென்ற உறவினர்களால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருவிழந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தரராஜன் வயது 45. மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கடந்த 4 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் வந்த சௌந்தரராஜனை மருத்துவர்கள் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்துள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சாதாரண படுக்கையிலிருந்து ஆக்சிஜன் படுக்கைக்கு மாற்றுவதற்காக ஊழியர்கள் சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்துள்ளனர். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகி ஆக்சிஜன் படுக்கைக்கு கொண்டு செல்லும் முன்பாகவே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லாத காரணத்தால் அவரது உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் அவரது உடலை சுகாதார முறைப்படி எரியூட்ட வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கூறியதால் அவரது உடலை சவக்கிடங்கில் ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர். அப்போது வழிமறித்த உறவினர்கள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லாதவரின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் பிரச்னையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனைக்கு விரைந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்கு உடன்படாத உறவினர்கள் இறந்தவரின் உடலை காவல்துறையினரின் பாதுகாப்பையும் மீறி ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு சென்றனர். இதனால் மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரது உடலை சுகாதார முறைப்படி அடக்கம் செய்ய சுகாதார துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகி வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 34 ஆயிரத்து 951 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 30 ஆயிரத்து 448 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 482 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 573 பேர் குணமாகி சென்றுள்ளனர். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 434 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இறந்தவரின் உடலை கேட்டு அவரது உறவினர்கள் ஏராளமானோர், கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது சமூக இடைவெளியின்றி கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனை முன்பு திரண்டு பிரச்சனையில் ஈடுபட்ட சம்பவத்தால் இங்கு திரண்ட பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்க கூடும் என மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் சுவாஸ்யமான செய்திகள் படிக்க: ‛மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்...’ மறக்க முடியாத மோகனாம்பாளின் பிறந்த தினமும்!