Pugar Petti: தஞ்சை: சாலையை அப்புறம் போடுங்க... முதலில் மின்மாற்றியை மாற்றுங்க...! அபாயத்தால் கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!
சாலை விரிவாக்கப்பணிக்காக பொக்லைன் வைத்து பள்ளம் தோண்டும் போது அந்த அதிர்வுகளால் இந்த மின்மாற்றி பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது.
தஞ்சை அருகே வல்லத்தில் பழுதடைந்துள்ள மின்மாற்றி, சாலை விரிவாக்க பணியினால் பாதிக்கப்படும் என்பதால் அதனை மாற்றிய பின்னர் சாலைப்பணிகளை தொடர வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சை அருகே வல்லம் தேர்வு நிலை பேரூராட்சி உள்ளது. இப்பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் வல்லம் மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் வல்லம் பஸ் ஸ்டாண்ட் வந்து தஞ்சை, திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.
வல்லம் பஸ் ஸ்டாண்ட்டை சுற்றி அரசு பள்ளிகள், போலீஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகிறது. தினமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கூலித் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் வல்லம் வந்து செல்கின்றனர். இதனால் வல்லத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
மேலும் திருச்சி உட்பட முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளும் சென்று வருகின்றன. வல்லத்தை சேர்ந்த மாணவர்கள் தஞ்சையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு படிக்க செல்கின்றனர். இதனால் எப்போதும் வல்லத்தில் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில் வல்லத்தில் சாலையை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வல்லத்தில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டு சாலையின் இருபுறமும் அகலப்படுத்தப்படுகிறது. மேலும் மழை நீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
பழைமையான மின்மாற்றி
இதற்காக சாலையில் பள்ளம் தோண்டும் பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் தஞ்சை – திருச்சி சாலை வல்லத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வாசலில் சிமெண்டால் அமைக்கப்பட்ட மிக பழைமையான மின்மாற்றி உள்ளது. இதில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது.
சாலை விரிவாக்கத்திற்காக பள்ளம் தோண்டும்போது இந்த மின்மாற்றி பாதிக்கப்படலாம் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இப்பகுதி வழியாக ஏராளமான பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் இந்த மின்மாற்றியை முறையாக அகற்ற வேண்டும். பழுதடைந்துள்ள இந்த மின்மாற்றிக்கு பதிலாக புதிய மின்மாற்றியை அமைத்து விட்டு பின்னர் சாலைப்பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யாருக்கும் எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், "சாலை விரிவாக்கப்பணிக்காக பொக்லைன் வைத்து பள்ளம் தோண்டும் போது அந்த அதிர்வுகளால் இந்த மின்மாற்றி பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. எனவே இது குறித்து உடன் உரிய அதிகாரிகள் பார்வையிட்டு மாற்றித் தர வேண்டும்" என்றனர்.