நடப்பு கூட்டத்தொடருக்குள் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காவிடில் சென்னையில் போராட்டம்...!
செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேகர் தெரிவித்துள்ளார்
அனைத்து வசதிகளை கொண்ட கும்பகோணத்தை தனி மாவட்டமாக சட்டமன்ற கூட்டத்தொரிலேயே அறிவிக்க வேண்டும்
தமிழக அரசு, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே, கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கா விட்டால், வரும் செப். 14 ந்தேதி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம்
சோழமன்னர்களின் பண்டைய தலைநகரமாக கும்பகோணத்தை அடுத்த பழையாறை திகழ்ந்தது. 1789ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர் ஆட்சி காலம் முடியும் வரை 5 தாலுகாவிற்கு ஒரு தலைநகரம் என கும்பகோணம் தலைநகரமாக விளங்கியது. அதே போல் கடந்த 1806ஆம் ஆண்டு முதல் 1863ஆம் ஆண்டு வரை திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்ட பகுதிகளுக்கு மாவட்ட நீதிமன்றம் கும்பகோணத்தில் செயல்பட்டு வந்தது. இன்றும் மாவட்ட தலைமை நீதிமன்றம், சிவில் நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றகள், மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்களும் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களாக செயல்பட்டு வருகிறது.
கும்பகோணம் நகரம் கடந்த 1866ஆம் ஆண்டு முதல் நகராட்சி அந்தஸ்து பெற்று சிறப்பு நகராட்சியாக தமிழகத்தில் குறிப்பிடப்படும் நகராட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் உலக புகழ்பெற்ற மாசி மகாமகமும், வருடந்தோறும் நடைபெறும் மாசிமகமத்தின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமககுளத்தில் புனித நீராடி செல்வார்கள். இதே போல் உலகத்தில் முதன்முதலாக தோன்ற ஆதிகும்பேஸ்வரர் கோயில், 74 லட்சம் கோடி மந்திரங்களை உள்ளடக்கிய மங்களாம்பிகையம்மன் உள்ள 12 சிவன் கோயில்களும், 5 பெருமாள் கோயில்கள் என கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் புராதன, நவக்கிரஹ, பரிகார கோயில்கள் உள்ளன.
அதே போல் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி நாகை மாவட்டம் வரை சேவையை இன்றும் வழங்குகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 8 பேருந்து கோட்டங்களில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டமும் செயல்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காவிரி டெல்டா மாவட்டத்திற்கான தலைமை அலுவலகம் கும்பகோணத்தில் செயல்படுகிறது. அதே போல் வர்த்தக கேந்திரமாக கும்பகோணம் விளங்குவதால் தஞ்சைக்கு முன்னரே கும்பகோணத்தில் வருமான வரித்துறை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட தலைமையகத்திற்கு தேவையான பதிவாளர் அலுவலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம், கல்வி மாவட்டமும் தற்போது இயங்கி வருகிறது. கும்பகோணம் மறைமாவட்டம் என்பது தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கி, நாமக்கல் வரை இன்றளவும் செயல்பட்டு வருகிறது. அதே போல் தனியார் நிறுவனங்களான சிட்டி யூனியன் வங்கியின் தலைமையிடம், இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகம், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் தலைமையிடம் என ஏராளமான நிறுவனங்களும் உள்ளன.
பாரம்பரியமும், வரலாற்று பின்னணியும் கொண்டுள்ள கும்பகோணத்தில் கைவினைப் பொருட்களான ஐம்பொன் சிலைகள், பித்தளை குத்து விளக்குகள், பாத்திரங்கள் என நாள்தோறும் லட்சகணக்கான ரூபாய்க்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதே போல் கும்பகோணம் வெற்றிலை, நெய் சீவல் உள்ளிட்டவைகளும் சிறப்பு வாய்ந்த பொருட்களாக உள்ளது. கும்பகோணத்தில் நாள்ஒன்றுக்கு 50 கிலோ தங்கம் விற்பனை செய்யப்படுவதால், பிரபலமான நகை நிறுவனங்கள் அனைத்தும் கும்பகோணத்தில் விற்பனையை தொடங்குகின்றனர். இவை மட்டுமல்லாமல் நாள்தோறும் கும்பகோணத்தில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு பரிமாற்றம் நடைபெற்று வருகின்றது.
இத்தகைய சிறப்புகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட கும்பகோணத்தை தனி மாவட்டமாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வந்தால், கடந்த அதிமுக ஆட்சியின் போது, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தஞ்சையை பிரித்து கும்பகோணம் தனிமாவட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என உறுதியளித்தார். ஆனால் அதன் அந்த அறிவிப்பு பின்னர் கிடப்பில் போடப்பட்டது. இதனால் மீண்டும் ஆர்ப்பாட்டம், போராட்டம், கோலம் வரைதல், மனு அனுப்புதல் போன்ற பல்வேறு விதமாக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது, திமுக தலைவர் முக.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தால், கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருக்கடையூரிலும், ஒரத்தநாட்டிலும் தெரிவித்தார். ஆனால் பதவி ஏற்று, சட்டமன்றம் நடைபெற்று வரும் நிலையில், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காமல் இருந்து வருவதால் கும்பகோணம் புதிய மாவட்ட கோரும் ஒருங்கிணைப்பு குழு சார்பில், சென்னையில் கடந்த ஆகஸ்ட்18 ஆம் தேதி போராட்டம் செய்வதற்காக அறிவித்திருந்தனர். ஆனால் ஆகஸ்ட் 17ஆம் தேதி அதிகாரிகள், போராட்டக்காரர்களிடம், அதிகமான ஆவணங்கள் அரசுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. அதனால் 3 வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர். அதன் பேரில் போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.
ஆனால், சட்டமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இதுவரை எந்த விதமான அறிவிப்பும் செய்யாததால், தமிழக அரசு, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே, கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்காவிட்டால், வரும் செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைப்பின், ஒருங்கிணைப்பாளரும், வணிக சங்க தலைவருமான சேகர் தெரிவித்துள்ளார். மாவட்ட தலைநகரத்திற்கான அனைத்து அந்தஸ்தும் பெற்றிருந்தாலும் கூட மாவட்ட தலைநகரமாக இல்லையே என்ற குறை மட்டும் குடந்தை பகுதி மக்களிடம் வேதனையில் இருந்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.