வாழைத்தார் சாகுபடியில் ஆர்வம் காட்டாத விவசாயிகள்: பொங்கலுக்கு வாழைப்பழங்கள் விலை உயருமா?
பொங்கல் பண்டிகைக்காக பூவன் தார் சாகுபடிதான் அதிகம் நடக்கும். கடந்தாண்டு ஒரு தார் ரூ.300 முதல் 400 வரை விற்பனையானதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்: மக்கள் வாழைத்தார் வாங்குவதை அதிகம் விரும்புவதில்லை. இதனால் இம்முறை வாழை விவசாயிகள் அதிகளவில் வாழை இலை சாகுபடியைதான் மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு குறைந்தளவே வாழைத்தார்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிய வந்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று பொங்கல் பண்டிகை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து புது அரிசியில் பொங்கலிட்டி கதிரவனுக்கு படைத்து விவசாயிகள் தங்கள் நன்றியை தெரிவிப்பார்கள். இந்த பொங்கல் பண்டிகையில் கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைப்பழம் போன்றவை முக்கிய இடம் வகிக்கும்.
தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழையும் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக காவிரி கரையோர பகுதிகளில் அதிகளவில் வாழை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, தோகூர், திருவையாறு, நடுக்காவேரி, மேலத்திருப்பூந்துருத்தி, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் தஞ்சை மாவட்டத்தில் கண்டியூர், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, வளப்பக்குடி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொங்கல் விற்பனைக்காக வாழைத்தார் அறுவடைப் பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இம்முறை வாழை விவசாயிகள் இலை சாகுபடியில்தான் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். வாழைத்தார் விடுவதில் யாரும் இறங்கவில்லை. கடந்த ஆண்டில் வடுககுடி பகுதியில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகைக்காக வந்து பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது. வெளி மாவட்டங்களுக்கும் இப்பகுதியில் இருந்து வாழைத்தார் அனுப்பி வைக்கும் பணிகளில் தீவிரமாக நடந்தது. ஆனால் இந்தாண்டு வாழை விவசாயிகள் அதிகம் தார் விடாமல் வாழை இலை சாகுபடியை மட்டுமே மேற்கொண்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்காக பூவன் தார் சாகுபடிதான் அதிகம் நடக்கும். கடந்தாண்டு ஒரு தார் ரூ.300 முதல் 400 வரை விற்பனையானதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது வாழைத்தார் வாங்குவதை மக்கள் அதிகம் விரும்பவில்லை. அதனால் தற்போது தஞ்சை மாவட்ட பகுதிகளில் வாழைத்தார் விற்பனை டல் அடிக்கிறது.
இதுகுறித்து வாழை சாகுபடி செய்துள்ள விவசாயி வடுகக்குடி மதியழகன் கூறியதாவது: வடுகக்குடி, ஆச்சனூர், மருவூர், சாத்தனூர், திருப்பூந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வந்து வாழைத்தார் கொள்முதல் செய்து வந்தனர். கடந்தாண்டு வாழைத்தார் ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையானது. ஆனால் தற்போது தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான வாழை விவசாயிகள் வாழை இலை சாகுபடியை தான் மேற்கொண்டு வருகிறோம். யாரும் வாழைத்தார் சாகுபடியை விரும்பவில்லை. காரணம் மக்கள் மத்தியில் பொங்கலுக்கு வாழைத்தார் வாங்குவது என்பது குறைந்து விட்டது. மக்கள் மனதிலும் வாழைப்பழம் ஊதுபத்தி ஸ்டாண்ட் என்ற மனநிலை ஏற்பட்டு விட்டது.
வாழைத்தாருக்கு முட்டு கொடுத்து வைக்க வேண்டும். இதற்கு சவுக்கு முட்டுக்கழிதான் வைப்போம். ஆனால் இதன் ஒன்றின் விலையே ரூ.70 ஆகிறது. இதனால் வாழைத்தார் சாகுபடி குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.