ரத்ததானம், அன்னதானம், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - மயிலாடுதுறையில் களைகட்டிய ராமதாஸ் பிறந்தநாள்
மயிலாடுதுறையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை பாமகவினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸின் 85 வது பிறந்தநாளை இன்று பாமகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பசுமை தாயகம் நாள் விழா மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா பாமகவினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
அதனை முன்னிட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைகளில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி, இரத்ததானம், மரக்கன்று நடுதல், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி பாமகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பசுமைத்தாயகம் நாள் விழா பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் தலைமையில் கட்சியினர் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிலும் அன்பகத்தில் காலை உணவு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனைகளில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், புத்தாடைகள் பரிசாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் இரத்ததானம் வழங்கினர்.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொடியேற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து வரும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நீண்ட ஆயுளோடு, ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும் என கூறி பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளையும் பாமகவினர் நடத்தினர். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பாமகவினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.