தமிழகத்தில் எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மணல் குவாரிகள் திறப்பு - அமைச்சர் மெய்யநாதன்
கட்டுமானபணிகளுக்கு மணல் தட்டுப்பாடு இருப்பதாக எதிர்கட்சியினர் சட்டசபையில் தெரிவித்ததால் தமிழகத்தில் புதிதாக மணல்குவாரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து மே 7 ஆம் தேதியோடு 2 ஆண்டுகள் நிறைவடைந்து. மூன்றாம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்துவைக்கிறது. இதனையடுத்து மே 7, 8, 9 ஆகிய நாட்களில் தமிழ்நாடு முழுவதும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், “ஈடில்லா, ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற தமிழ்நாடு அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்கும் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். தொடர்ந்து தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” எனும் மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை மலர் வெளியீட்டுவிழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற சாதனை மலர் வெளியீட்டுவிழா நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு பல்வேறுதுறைகளின் சார்பில் 382 பயனாளிகளுக்கு 6.41 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்டஉதவிகளை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கூறுகையில்; திமுக ஆட்சி அமைந்தபிறகு 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 மாடிகொண்ட அனைத்து வசதிகளுடன் கூடிய மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. பூம்புகார் சுற்றுலாமையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் அலக்குடி பகுதியில் கரையை பலப்படுத்தும் பணிகளும், புயல்பாதுகாப்பு மையம் அமைகப்பட உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அனைத்து வசதிகளும் மேம்படுத்திகொடுக்கப்படும். புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை நகரில் நீண்ட நாட்களாக உள்ள பாதாளசாக்கடை பிரச்சனை தீர்வுகான வேண்டியுள்ளது. அதற்காக 99 கோடி ரூபாய் திட்டமதிப்பீடு தயார்செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பாதாளசாக்கடை திட்டம் சரியாக செயல்படுத்தப்படாததால் தற்போது பிரச்னையாக உள்ளது. அதனை விரைவில் சீரமைத்து பாதாளசாக்கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகானப்படும் என்றார். அதனை தொடர்ந்து கட்டுமானபணிகளுக்கு மணல் தட்டுப்பாடு இருப்பதாக எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சட்டசபையில் தெரிவித்ததால் 25 இடங்களில் புதிதாக மணல்குவாரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
உள்கட்டமைப்பை மேம்படுத்த மணல் அவசியம் தேவைப்படுவதால் அதனடிப்படையில் தேவைக்கு ஏற்ப பொதுப்பணித்துறை மூலமாகத்தான் மணல்குவாரிகள் திறக்கபட உள்ளது என்றார். இந்நிகழ்வில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

