Tamil Centum Scorers: தமிழில் நூற்றுக்கு நூறு பெற்ற பிளஸ் 2 மாணவிகள் லக்ஷயா ஸ்ரீ, நந்தினி; யார் இவர்கள்?
Tamil Nadu 12th Result 2023: தமிழ்ப் பாடத்தில் மாணவிகள் 2 பேர் லக்ஷயா ஸ்ரீ, நந்தினி இரண்டு பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாநிலம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழ்ப் பாடத்தில் மாணவிகள் 2 பேர் லக்ஷயா ஸ்ரீ, நந்தினி இரண்டு பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். யார் இவர்கள் என்று பார்க்கலாம்.
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் தமிழில் இருவர் மட்டுமே நூற்றுக்கு நூறு பெற்றுள்ளார். இதில் மாணவி நந்தினி அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, மொத்த மதிப்பெண்ணாக 600-க்கு 600 மதிப்பெண் வாங்கியுள்ளார். இதனால் மாவட்டத்தில் முதலிடம் பெற்றதோடு, மாநிலத்திலும் முதலிடம் பெற்றுள்ளார்.
595 மதிப்பெண்கள் பெற்ற லக்ஷயா ஸ்ரீ
அதேபோல அரக்கோணம் தனம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மாணவி லக்ஷயா ஸ்ரீ தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் தவிர்த்து பொருளியல், கணக்குப் பதிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆங்கிலப் பாடத்தில் 100-க்கு 96 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதேபோல வணிகவியல் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதன்மூலம் மொத்த மதிப்பெண்ணாக 600-க்கு 596 மதிப்பெண் வாங்கியுள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் 47,934 பேர் தோல்வி
நடப்பாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 47,934 பேர் தோல்வியடைந்த நிலையில், அவர்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி துணைத் தேர்வுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | Nandhini: 600-க்கு 600 மதிப்பெண்; திண்டுக்கல் கூலித் தொழிலாளி மகள்- யார் இந்த மாணவி நந்தினி?