(Source: ECI/ABP News/ABP Majha)
‛கடும் நிதி சுமை...’ பழைய பென்ஷன் திட்டம் குறித்த கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!
‛பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தபொழுது ரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கவில்லை...
பழைய பென்ஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக படிப்படியாக அமல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் எழும்பெரு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதுவரை மதிய உணவு மட்டும் பள்ளிகளில் வழங்கி வந்திருந்த நிலையில் தற்பொழுது காலை சிற்றுண்டியும் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இன்றைக்கு உள்ள நிதி நிலைமையும் கடந்து மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடக்க கல்வி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இருக்கிறார்கள் கண்டிப்பாக ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும், குறிப்பாக அரசாணை 101, 108 இந்த அரசாணை மூலமாக ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் சட்டமன்ற முடிந்த பின்னர் தமிழக முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.
பழைய பென்ஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, ‛பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தபொழுது ரத்தினக் கம்பளம் போட்டு விரிக்கவில்லை. நிர்வாகம் நிதி எதுவாக இருந்தாலும் கடுமையான சுமையில் தான் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றோம். திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக படிப்படியாக அமல்படுத்தப்படும்,’ என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தமிழ்நாடு சட்டமன்ற தலைமை கொறடா கோவி செழியன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதே போன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த காலங்களில் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த காலங்களில் 6 முதல் 7 சதவீதம் வரை மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை. இந்த சதவீதம் வழக்கமான அளவாகத்தான் இருக்கிறது. நடப்பாண்டு 3 முதல் 4 சதவீதம் தேர்வுக்கு வராதவர்கள் விகிதம் உள்ளது. பயப்படாமல், துணிந்து வாருங்கள் வெறும் மதிப்பெண்கள் மட்டுமே மாணவ, மாணவிகளை மதிப்பீடு செய்யவில்லை. அவர்களுடைய திறமையைத்தான் மதிப்பீடு செய்யப் போகிறது. என்ன மதிப்பெண் வருகிறதோ, அதற்கான தீர்வு கண்டிப்பாக இருக்கும். தங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.