முகத்தை பதம் பார்த்து விபத்தை ஏற்படுத்தும் கருவேல மரங்கள்: எங்கு தெரியுங்களா?
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பாக அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பாக அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
45 கி.மீ. தூரம் கொண்ட கிழக்கு கடற்கரை சாலை
தஞ்சை மாவட்டத்தில், கிழக்கு கடற்கரை சாலையானது, தம்பிக்கோட்டை தொடங்கி, புதுக்கோட்டை எல்லையானது கட்டுமாவடி வரை சுமார் 45 கி.மீட்டர் தூரம் கொண்டது. கன்னியாகுமரி- சென்னையை இணைக்கும் முக்கிய சாலையாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த வழியாக ராமேஸ்வரம், மனோரா, வேளாங்கண்ணி, நாகூர், புதுச்சேரி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள் உள்ளன.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சாலை
நாகூர், வேளாங்கண்ணி போன்ற திருத்தலங்களுக்கு வெளி மாவட்ட மற்றும் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்களின் வாகனங்களில் வந்து செல்கின்றனர். மேலும் புகழ்பெற்ற மனோராவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகம். மேலும் இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
சாலையின் இருபுறமும் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்கள்
தஞ்சை மாவட்ட பகுதிகளான தம்பிக்கோட்டை வடகாடு, அதிராம்பட்டினம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், சம்பைப்பட்டினம், செந்தலைப் பட்டினம், குப்பத்தேவன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் புதர் போல் மண்டி கிடைக்கிறது.
விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ளது
இந்த கருவேல மரங்கள் படர்ந்து சாலையில் விழுந்து கிடக்கிறது. இதனால் இந்த சாலையில் கனரக வாகனங்கள் வரும் போது எதிரே வரும் இரு சக்கர வாகனங்கள் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மேலும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் சாலையை மறைத்து காணப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் சட்டென்று ஒதுங்கினால் முகத்தில் கருவேல முற்கள் பாய்ந்து தடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே இந்த கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலமுறை புகார் தெரிவித்துவிட்டோம்
இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் தரப்பில் கூறியதாவது: சேதுபாவாசத்திரத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.