CM Stalin: முதலமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லையா? மீண்டும் மீண்டும், பட்டுக்கோட்டை நகராட்சியின் அராஜகம்
CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டிய நபரின் பணிக்கே, பட்டுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ள இடையூறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

CM Stalin: நீர் நிலைகளை காப்பாற்றும் பணிகளை நீங்களும் செய்யமாட்டீர்கள், செய்பவர்களையும் விடமாட்டீர்களா? என அரசை நோக்கி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நிமல் ராகவனின் குற்றச்சாட்டு:
தமிழ்நாட்டின் ஏரி மனிதன் என குறிப்பிடப்படும் தஞ்சாவூரைச் சேர்ந்த நிமல் ராகவன், இந்தியாவை தாண்டி சர்வதேச நாடுகளுக்கும் சென்று கைவிடப்பட்ட நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கான பொதுநல பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ” “பட்டுக்கோட்டை மங்கம்மா குட்டையில் அராஜகம்” பல ஆண்டுகளாக குப்பை மேடாக இருந்த இடத்தை பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு உரிய அனுமதி பெற்று வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் தொடங்கப்பட்டது. குப்பை மேடாக இருந்த இடத்தை குப்பைகள் முழுவதையும் அகற்றிய பிறகு முழு குளமாக்குவதற்கு முயற்சி செய்தோம். இந்த குட்டை இருக்கும் இடத்தை அளந்து கொடுப்பதில் இருந்த சிக்கல் காரணமாக தற்காலிகமாக வேலையை நிறுத்தி வைத்திருந்தோம். இந்த இடைப்பட்ட நேரத்தில் மீண்டும் இங்கு நகராட்சியால் குப்பை கொட்டப்பட்டு மீண்டும் குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.
நகராட்சி அதிகாரிகள் அத்துமீறல்:
நீர் நிலைகளை மீட்டெடுப்பதற்கு ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட சிரமங்களையும் தாண்டி கிட்டத்தட்ட பிச்சை எடுக்காத குறையாக எல்லாவற்றையும் செய்து பணிகளை தொடங்கினால் அந்தப் பணிகளை மீண்டும் மீண்டும் தடுப்பதற்கான அனைத்து வித அடக்குமுறைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மங்கம்மா குட்டை பட்டுக்கோட்டையில் ஒரு முக்கிய சாலையின் இருக்கக்கூடிய ஒரு இடம். தூய்மை செய்யப்பட்ட ஒரு குளத்தில் நீங்கள் இப்படி குப்பையை கொட்டுகின்றீர்கள் என்றால் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவோ பராமரிப்பற்று இருக்கும் நீர்நிலைகளையோ நீங்கள் என்னென்ன செய்வீர்கள்?? இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு வேண்டும், இங்கு கொட்டப்பட்ட குப்பைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் இதற்கான தீர்வை போராடித்தான் பெற வேண்டுமென்றால் அதற்கும் நாங்கள் தயார்” என குறிப்பிட்டுள்ளார்.
“பட்டுக்கோட்டை மங்கம்மா குட்டையில் அராஜகம்”
— Nimal Raghavan (@being_nimal) May 18, 2025
பல ஆண்டுகளாக குப்பை மேடாக இருந்த இடத்தை பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு உரிய அனுமதி பெற்று வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் தொடங்கப்பட்டது. குப்பை மேடாக இருந்த இடத்தை குப்பைகள் முழுவதையும் அகற்றிய பிறகு முழு… pic.twitter.com/pI2vQse6ZD
முதலமைச்சரே பாராட்டிய நிமல் ராகவன்:
தஞ்சாவூரில் குருவிக்கரம்பை பெரிய குளம் ஏரியை சீரமைத்ததை பாராட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் கூட கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். நிமல் ராகவனை முன்மாதிரியாக கொண்டு இளைஞர்களும், தன்னார்வலர்களும் தத்தமது பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைத்திட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். ஆனால், மக்களின் கோரிக்கையை ஏற்று நிமல் ராகவன் தரப்பு சுத்தம் செய்த நீர்நிலையில் நகராட்சியே மீண்டும் குப்பையை கொட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Meet Nimal who has been transforming so many water bodies across Tamil Nadu. Take a look at this video where he accuses one of the local municipal body of repeatedly dumping wastes in a water body he is try to restore. Clear cut case of TN's zero care towards waste management! 😑 https://t.co/L9JI9O6XGl
— Chennai Updates (@UpdatesChennai) May 23, 2025
நெட்டிசன்கள் கேள்வி:
நிமல் ராகவனின் பதிவை நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து அரசை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு பதிவர், “கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது” என குற்றம்சாட்டியுள்ளார். மற்றொரு பதிவர், நீர் நிலைகளை மீட்கும் பணிகளை அரசும் செய்யாது, செய்பவர்களையும் விடாது என சாடியுள்ளார். மற்றொரு பதிவர், நகராட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.





















