பல வகை வண்ணங்களில் வர்ணஜாலம் காட்டும் கலையம்ச நவராத்திரி பொம்மைகள்: ஆர்வத்துடன் வாங்கும் தஞ்சை மக்கள்
கண்காட்சியில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினை பொருட்களினால் தயாரிக்கப்பட்ட வர்ணமயமான விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன.

தஞ்சாவூர்: வண்ணங்களில் வர்ணஜாலம் காட்டும் அற்புதமான கலைப்படைப்புகளுடன் விற்பனைக்கு வந்துள்ள நவராத்திரி பொம்மைகளை வாங்க தஞ்சை மக்கள் வெகுவாக ஆர்வம் காட்டுகின்றனர்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு விசேஷம்தான். வீடுகள் தோறும் உற்சாகம் கரை புரண்டோடும். ஒவ்வொரு தேவியையும் வணங்கி வழிபடும் நவராத்திரி, பெண்களுக்கான விழா மட்டுமல்ல, பெண்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆண்களுக்குள் விதைக்கும் சிறந்த விழாவும் கூட. நவராத்திரியின் முக்கியமான அம்சம் கொலு வைப்பதுதான். ஒன்பது நாள் கொலுவில், விதவிதமான பொம்மைகளைக் காட்சிப்படுத்தி, அம்பாளுக்கு பூஜை செய்து வருபவர்களுக்கு பிரசாதமும், தாம்பூலமும் கொடுத்து உபசரித்து மகிழும் ஒப்பற்ற விழாதான் நவராத்தி விழா.

இந்த நவராத்திரியை தஞ்சை மக்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து மகிழ தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கண்கவரும் வண்ணங்களில் பொம்மைகள் விற்பனைக்கு ஏராளமாக வந்து இறங்கியிருக்கின்றன. இந்திய மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் விழாதான் இந்த நவராத்திரி. மக்களை கொடுமை செய்து வந்த மகிசாசுரனை அன்னை ஆதிபராசக்தி வதம் செய்து வெற்றியடைந்த விழாதான் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவானது 9 நாள் தொடர்ச்சியாக அம்மனுடைய உருவங்களை வைத்து வழிபாடு செய்வதாகும்.
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரியை மகா நவராத்திரி என்று அழைக்கின்றனர். நவராத்திரியானது 4 விதமாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. சாரதா நவராத்திரி அல்லது மகா நவராத்திரி (புரட்டாசி மாதம்), வசந்த நவராத்திரி (பங்குனி மாதம்), ஆஷாட நவராத்திரி (ஆனி மாதம்), சியாமளா நவராத்திரி (தை மாதம்) என்று ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்படுகிறது. ஆஷாட மற்றும் மகா நவராத்திரியை குப்த நவராத்திரி என்றும் அழைக்கின்றனர். இந்த நவராத்திரியை தாந்திரீகவாதிகள் தங்கள் சக்தியை அதிகரிக்க எடுக்கின்றனர்.
நவராத்தியின் போது கொலு அமைப்பதுதான் முக்கியமான ஒன்றாகும். இதில் எந்த படியில் எந்த பொம்மை வைக்க வேண்டும் என்ற விதிமுறையே இருக்கிறது. 1ம் படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள், 2ம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள், 3ம் படியில் மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
4ம் படியில் நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள், 5ம் படியில் ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகளின் பொம்மைகள், 6ம் படியில் ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள், 7ம் படியில் மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள். 8ம் படியில் தேவர்கள், அஷ்டதிக்குப் பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் மற்றும் தேவதைகளின் உருவங்கள் வைப்பார்கள். 9ம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் வைக்க வேண்டும்.
கொலுவில் கீழ் இருக்கும் மூன்று படிகளில் கொலுவிற்காக வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை, தாமச குணத்தைக் குறிக்கும்.அடுத்த மூன்று படிகளில் கொலுவிற்காக வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தைக் காட்டும். மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ சிலைகள் சத்வ குணத்தை அடைவதற்கு வழியை நமக்கு உணர்த்துகிறது.நவராத்திரி விழாவன்று நவராத்திரி விரதம் எடுப்பவர்கள் அந்த ஒன்பது நாளும் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு விரதத்தினை கடைப்பிடிக்க வேண்டும்.
நவராத்திரி விரதத்தினை எடுப்பவர்கள் திருமணம் ஆன பெண்களை தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமர வைத்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் போன்ற பொருள்களை கொடுக்கலாம். 8-ம் நாளான நவராத்திரி அன்று 2 முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களை அம்மனின் அம்சமாக கருதி பொட்டு, வளையல், உணவு, இனிப்பு மற்றும் ஆடை கொடுத்து குழந்தைகளை சந்தோஷப்படுத்தலாம்.
தமிழ்நாட்டில் இவ்விழா "நவராத்திரி" விழா பெயரிலும் கர்நாடகத்தில் “தசரா" என்ற பெயரிலும் குஜராத்தில் "தாண்டியா" என்ற பெயரிலும் மேற்கு வங்கத்திலும் வடஇந்தியாவின் பிற்பகுதிகளிலும் "துர்கா பூஜை” என்ற பெயரிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக திகழும் நவராத்திரி பண்டிகை ஆண்டுதோறும் 9 நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி பண்டிகையில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது பிரதானமாக விளங்குகிறது. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை வருகிற 22ம் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 1ம் தேதி தேதி வரை கொண்டாடப்படுகிறது.
பூம்புகார் என்ற பெயரில் புகழ்பெற்று விளங்கும் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளாச்சிக் கழகம், கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கொலு பொம்மைகளை வழங்குவதற்காக பூம்புகார் நிறுவனம் ஆண்டுதோறும் "கொலு பொம்மைகள் கண்காட்சி"யை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் தஞ்சாவூர், பூம்புகார் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்தாண்டும் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது.
இந்த கண்காட்சியில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினை பொருட்களினால் தயாரிக்கப்பட்ட வர்ணமயமான விதவிதமான கொலு பொம்மைகள் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. விற்பனைக்கு வந்துள்ள பொம்மைகள் அழகழகான வர்ணங்களில் மக்களை கவர்ந்து வருகிறது. இந்த ஆண்டு கண்காட்சியில் புதிய வரவாக ரேணுகா தேவி சிலை, துளசி அம்மன் சிலை, சியாமளா தேவி சிலை, ராவணன் வதம் செட்டு, அரசர் தர்பார் செட்டு, மல்யுத்த வீரர்கள் செட், சிவன்- பார்வதி சிலை, கார்த்திகை பெண்கள் செட், திருவாரூர் தியாகராஜர்- கமலாம்பாள் செட், அயோத்தி ராமர் சிலை, அப்துல் கலாம் சிலை, விவேகானந்தர் சிலை உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன. ரூ.75 முதல் ரூ. 40 ஆயிரம் வரை சிலைகள் விற்பனைக்கு உள்ளது. இவற்றை தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.





















