மேகதாட்டு அணை கட்டும் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அனுமதித்ததை கண்டித்து தஞ்சையில் ரயில் மறியல்
காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க எடுத்துக் கொண்டதும் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. இது ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முற்றிலும் மாறானது.

தஞ்சாவூா்: மேகதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசின் ஜல் சக்தி நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்தது மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க எடுத்துக் கொண்டதை கண்டித்து தஞ்சையில் இன்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்று காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் மிகத் தெளிவாக உத்தரவிட்டு அது மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. ஒரு ஆற்றின் குறுக்கே அணைக் கட்டும்போது கீழே உள்ள மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்யக்கூடாது என்பது உலகளாவிய கோட்பாடாகும்.

மேகதாது அணை வந்தால் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஜல் சக்தி நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்ததும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க எடுத்துக் கொண்டதும் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. இது ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முற்றிலும் மாறானது.
மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது மத்திய அரசின் அழுத்தத்தால் தான். மேகதாது அணைக்கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்ததை கண்டிப்பது என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று காலை 12 மணியளவில் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து அணை கட்டாமல் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் போலீசார் ரயில் மறியலில் ஈடுபட்ட 112 விவசாயிகளை கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் ரயில் நிலைய பகுதியில் பரபரப்பு நிலவியது. விவசாயிகள் மறியல் போராட்டத்தை அடுத்து மயிலாடுதுறைக்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை டவுன் டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சந்திரா, மணிகண்டன் மற்றும் ஏராளமான போலீசார் மேற்கொண்டனர்.
மறியல் போராட்டம் குறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன் கூறுகையில், மேகதாட்டு அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்யலாம் என்று கூறியதை வன்மையாக கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தி உள்ளோம். தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து வருகிறது. மேகதாட்டில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து ராசிமணலில் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும்.
மேகதாட்டு அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும். 20 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவர். 22 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் மௌனம் காப்பதையும் கண்டிக்கிறோம். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில முதல்வர்களை சந்தித்து மனு கொடுத்து மேகதாட்டு அணை விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க கேட்க உள்ளோம் என்றார்.





















