இந்தி பேசும் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டால்தான் இந்தியாவில் மாற்றம் ஏற்படும் - தமிமுன் அன்சாரி
இந்தி பேசும் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டால்தான் இந்தியாவில் மாற்றம் ஏற்படும் என நான்கு மாநில தேர்தல் முடிவு குறித்து மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் கிளியனூரை சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் சலாஹுதீன் என்பவரின் மகன் அஜ்மல்தீன் திருமணம் கிளியனூரில் நடைப்பெற்றது. அந்த திருமணத்திற்கு கலந்துகொண்ட மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மணமக்களை வாழ்த்திப் பேசினார். மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தது வாழ வேண்டும் என்றார். இதை இருவரும் வாழ்க்கையில் முன்னிறுத்த வேண்டும் என்றும் அது வாழ்க்கையை சிறப்பிக்கும் என்றவர், விட்டுக் கொடுக்காவிட்டால் என்னவாகும் என்பதற்கு இன்று மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் ஒரு உதாரணம் ஆகும் என்று பேசினார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அணுகுமுறைகளின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர் சிலேடையாக பேசியதை கண்ட பலரும் சிரித்தப்படி தலையசைத்து ஆமோதித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “நான்கு மாநில தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிக்கிறது. தெலுங்கானா தென்னிந்தியாவில் இருப்பதால் அங்கு மக்கள் வேறு முடிவு எடுத்துள்ளனர். இந்தி பேசும் வட மாநிலங்களில் வாழும் மக்களிடம் சிந்தனை மாற்றங்கள் ஏற்படாதவரை, இந்திய அரசியலில் மாற்றம் ஏற்படாது. தோல்விக்கான காரணம் குறித்து காங்கிரஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மத்திய பிரதேசத்தில் ஆம் ஆத்மியும், சமாஜ்வாடி கட்சியும் கேட்ட சில தொகுதிகளை கொடுத்திருந்தால் அங்கு இந்த தோல்வி காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்காது.
ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் களமாடியிருக்க வேண்டும். ராகுல் காந்தியின் நடைபயண உழைப்பு வீணாகியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மக்களவைத் தேர்தலுக்கான செமி ஃபைனல் தேர்தலாக இந்த தேர்தலை எதிர்கொண்ட நிலையில், இந்த தோல்வி மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ? என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையில் இந்த கூட்டணி போட்டியிடாமல், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்தால் காங்கிரஸூக்கு இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது” என்றார்.
நிகழ்வில் மாநில துணை செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான், மண்டல செயலாளர் சுதீன்,மாவட்ட செயலாளர் ஹாஜா சலீம்,மாவட்ட துணை செயலாளர் மிஸ்பா,விவசாய அணி மாவட்ட செயலாளர் லியாகத் அலி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர்கள் கடலங்குடி சாகுல் ஹமீது, கிளியனூர் அபுசாலிஹ் ஆகியோர்கள் உடனியிருந்தனர்.