Cyclone Michaung: மழை வெள்ளம், மின்சாரம் துண்டிப்பு, தண்ணீர் தேக்கம்.. அனைத்துக்கும் உதவி எண்கள் அறிவிப்பு- விவரம்
Cyclone Michaung Helpline: மழை வெள்ளம், மின்சாரம் துண்டிப்பு, தண்ணீர் தேங்கல், கழிவுநீர், மரம் விழுவது உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், சென்னை மாநராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.
மழை வெள்ளம், மின்சாரம் துண்டிப்பு, தண்ணீர் தேங்கல், கழிவுநீர், மரம் விழுவது உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், சென்னை மாநராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.
கொட்டும் மழையால் கடும் பாதிப்பு
மிக்ஜாம் புயலால் வட தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விட்டுவிட்டு கன மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஆங்காங்கே கடுமையாகத் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த நேரத்தில் பொது மக்கள் மழையால் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பு நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாங்காட்டில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் ரப்பர் படகுகள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆந்திரா செல்லக்கூடிய புழல் சாலையில் 4 அடி தூரத்திற்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையின் உள்ளே மழைநீர் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பழவேற்காட்டில் உள்ள லைட் ஹவுஸ் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து கடல் நீர் கிராமத்திற்குள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேட்லி, ரங்கராஜபுரம், வியாசர்பாடி உட்பட சென்னையில் 14 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.
மீட்புப் பணி தொடக்கம்
அரக்கோணத்தில் இருந்து 25 பேர் கொண்ட மீட்புக்குழு, சென்னைக்கு வந்து, தாம்பரம், வேளச்சேரி பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில் கள்ளக்குறிச்சி, வேலூர்,திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு
இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது. குறிப்பாக மழை வெள்ளம், மின்சாரம் துண்டிப்பு, தண்ணீர் தேங்கல், கழிவுநீர், மரம் விழுவது உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், சென்னை மாநராட்சியை அழைக்கலாம்.
இதன்படி, பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணை அழைத்து, தங்களின் பிரச்சினைகளைக் கூறலாம். 044- 25619204, 044- 25619206, 044- 25619207 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு, தங்களின் குறைகளைத் தெரிவிக்கலாம்.
அதேபோல, 9445477205 என்ற எண்ணை வாட்ஸப் மூலம் தொடர்புகொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.