Cyclone Michuang: தொடரும் கனமழையால் ஓடுபாதைகளில் நிரம்பிய தண்ணீர்.. இன்றிரவு வரை விமான நிலையம் மூடப்படும் என அறிவிப்பு..!
சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால், விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால், விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் தண்ணீர் அடையாறு ஆற்றில், பெருமளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், விமான நிலையத்தின் பின்பகுதிகள் வழியாக, விமான நிலைய ஓடு பாதைகளை சூழ்ந்து கொண்டதால், விமானத்தை இயக்க முடியவில்லை.
எனவே சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் அனைத்து விமானங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, வேறு விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.
அதோடு காற்றின் வேகம் அதிகரித்து வருவதால், இந்த நேரத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி, விமானங்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வானிலை சீரடைந்த பின்பு மீண்டும், விமான சேவை தொடங்கும். சென்னை விமான நிலைய சிறப்பு குழுவினர், இந்திய வானிலை ஆய்வு குழுவினரின், யோசனைகளைப் பெற்று, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இவ்வாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
விமானங்கள் ரத்து என அறிவிப்பு:
முன்னதாக, மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக, 6 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை புறப்படும் விமானங்கள் 10, வருகை விமானங்கள் 10, என மொத்தமாக 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் 14, வருகை விமானங்கள் 12, மொத்தம் 26 விமானங்கள் பல மணி நேரம் தாமதமானது.
இன்று சென்னைக்கு அபுதாபி 2 விமானங்கள், துபாய் 2 விமானங்கள் மற்றும் பக்ரைன், மும்பை மொத்தம் 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
அதைப்போல் சென்னையில் இருந்து துபாய், இலங்கை, விஜயவாடா, ராஜமுந்திரி, கோவை, திருச்சி, கொச்சி உள்ளிட்ட 10 புறப்பாடு விமானங்கள், மற்றும் அதே இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரும் 10 விமானங்கள், ஆகிய 20 விமானங்கள் இன்று இதுவரையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தவிர துபாய், லண்டன், சிங்கப்பூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா, உட்பட 14 புறப்பாடு விமானங்கள், லண்டன், கோலாலம்பூர், சார்ஜா, துபாய், மும்பை, டெல்லி உள்ளிட்ட 12 வருகை விமானங்கள், மொத்தம் 26 விமானங்கள் இதுவரை பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வரும் விமானங்கள் மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படலாம், அல்லது வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படலாம், இல்லையேல் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னை விமான நிலையம் இன்றிரவு வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து விமான பயணிகள் அனைவரும் அந்தந்த விமானம் நிறுவனங்களின், இணையதளங்களில் தொடர்பு கொண்டு விமானங்களின் புறப்பாடு வருகை குறித்து, பயணிகள் தெரிந்து கொண்டு, அதன்பின்பு விமான நிலையத்திற்கு வந்தால் போதும். மேலும் அவசியமான பயணம் என்றால் மட்டும், இன்று விமானப்பயணம் மேற்கொள்ளலாம். இல்லை என்றால், இன்று விமான பயணத்தை பயணிகள் தவிர்ப்பது நல்லது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.