![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மாயூரநாதர் கோயில் குடமுழுக்கு திருப்பணிகளை கண்காணிக்க அறநிலையத்துறை அதிகாரி; அமைச்சர் பிறப்பித்த உத்தரவு
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலய கும்பாபிஷேகம் வருகின்ற 3 -ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
![மாயூரநாதர் கோயில் குடமுழுக்கு திருப்பணிகளை கண்காணிக்க அறநிலையத்துறை அதிகாரி; அமைச்சர் பிறப்பித்த உத்தரவு Minister sekar babu ordered to appoint an officer of the hrnc department to monitor the festival - Mayuranathar temple festival on September 3 TNN மாயூரநாதர் கோயில் குடமுழுக்கு திருப்பணிகளை கண்காணிக்க அறநிலையத்துறை அதிகாரி; அமைச்சர் பிறப்பித்த உத்தரவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/24/8a595e93012ea91ec2c6bc046c6558011692863784728733_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அபயாம்பிகை சமேத மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததும், தேவாரப் பாடல்கள் பெற்றதுமான இவ்வாலயத்தில் அபயாம்பிகை அம்மன் மயில் உரு கொண்டு சிவனை பூஜித்து மயில் உரு நீங்கியதாக புராண வரலாறு. இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது.
குடமுழுக்கு விழாவிற்காக கோயில் திருப்பணிகள் 4 கோடியை 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் மாயூரநாதர் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், இந்து அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் வந்த அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதையுடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அமைச்சர் மாயூரநாதர், அபயாம்பிகை சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். வேத சிவகாம பாடசாலை நிறுவனரும் ஆலயத்தின் மூத்த அர்ச்சகருமான சுவாமிநாதன் சிவாச்சாரியார் ஆலயத்தின் வரலாறு குறித்து விளக்கி கூறினார். தொடர்ந்து யாகசாலை அமைத்தல், கோயில் குளம், யானை அபயாம்பிகை நீராடுவதற்கு கட்டப்பட்டு வரும் தொட்டி, மறு சீரமைப்பு செய்யப்பட்டு வரும் தேர் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார். யானை குளிப்பதற்கான தொட்டியின் அளவு குறித்து கேட்டறிந்தார்.
மேலும் கோயில் திருக்குளத்தில் முறையாக மண் சேறுகள் அகற்றப்படவில்லை என்றும், கும்பாபிஷேகம் நடைபெறுவதற்குள் பணிகள் முடிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் சேகர்பாபு திருப்பணிகளை கண்காணித்து கோயில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்த இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அதிகாரி ஒருவரை நியமிக்க அறநிலையத்துறை ஆணையர் முரளிதரனுக்கு உத்தரவிட்டார். இதில் கோயில் நிர்வாகம் சார்பில் திருவாவடுதுறை ஆதினம் பொது மேலாளர் ராஜேந்திரன், கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)