Asia Cup 2023: ஆறு நாட்கள் நோ ரெஸ்ட்! ஜிம், நீச்சல், ஓட்டம், யோகா என தொடர் பயிற்சி… கோலி, ரோஹித்தையும் வாட்டிவதைக்கும் NCA!
தங்கள் பயிற்சி திட்டத்தைப் பின்பற்றாத வீரர்களை என்ன செய்வது என்பது குறித்து அணி நிர்வாகம் பின்னர் முடிவெடுக்கும். தகுந்த உடல் தகுதி இல்லாதவர்கள் ஆசியக் கோப்பை அணியில் இருந்து வெளியேற்றப்படலாம்.
இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ப்ரேக் முடிவடைந்த நிலையில், ஆசியக் கோப்பை 2023க்கு முன்னதாக ஆறு நாள் முகாமில் இணைந்துள்ளனர். ஆலூரில் (பெங்களூருவுக்கு அருகில்) உள்ள ஆசியக் கோப்பை முகாம், போட்டிக்கு முன்னதாக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஆசியக்கோப்பைக்கு தயார்படுத்தல்
விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இதில் இணைந்துள்ளனர். ஆசிய கோப்பையில் விளையாட அனுமதிக்கப்படுவதற்கு முன் அனைத்து நட்சத்திரங்களும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து தொடரில் பங்கேற்காமல் மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து நேரடியாக நாடு திரும்பிய வீரர்களுக்கு ஏற்கனவே 13 நாள் உடற்பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த வீரர்களின் குழுவில், ஜூன் மாதம் WTC இறுதிப் போட்டிக்கு பின்னர் எந்த போட்டியிலும் ஆடாத முகமது ஷமியும் அடங்குவார். எல்லா போட்டிகளும் முடிந்து, இப்போது முழு ஆசியக் கோப்பை 2023 அணியும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதால், அனைத்து வீரர்களும் இரத்தப் பரிசோதனை உட்பட முழுமையான உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பிசியோக்கள் வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிப்பார்கள். தகுந்த உடல் தகுதி இல்லாதவர்கள் ஆசியக் கோப்பை அணியில் இருந்து வெளியேற்றப்படலாம்.
Virat Kohli passed the Yo-Yo Test.
— Johns. (@CricCrazyJohns) August 24, 2023
Ready for the Asia Cup. pic.twitter.com/L7A8wJ4HDC
ஆசிய கோப்பை 2023 அணிக்கான NCA இன் சிறப்பு திட்டம்
- உடல் இயக்கம், தோள்பட்டை மற்றும் குளுட் தசைகள் ஆகியவற்றில் முக்கியத்துவம் செலுத்தும் உடற்பயிற்சி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
- வீரர்கள் தங்கள் உடல் வலிமையிலும் கவனம் செலுத்துகின்றனர்.
- NCA ஒவ்வொரு வீரருக்கும் சிறப்பு விதிமுறைகளை வடிவமைத்துள்ளது.
- ஒவ்வொரு வீரரும் குறிப்பிட்ட அளவு புரதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும், ஜிம் ஒர்க்அவுட்களை முடிக்க வேண்டும், நடக்க வேண்டும், ஓட வேண்டும், அதைத் தொடர்ந்து நீச்சல் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
- விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்றவர்களுக்கு ஒன்பது மணிநேர தூக்கத்துடன் யோகா பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து இரண்டு மாதங்கள் ஃபிட்டாக இருக்க வேண்டும்
வீரர்கள் உடற்தகுதியை இழக்காத வகையில் என்சிஏ (தேசிய கிரிக்கெட் அகாடமி) திட்டத்தை வடிவமைத்ததாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் விளக்கினார். ஆசிய கோப்பை 2023 மற்றும் உலகக் கோப்பை 2023 ஆகிய இரண்டிற்கும் இடையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிறது. அதனால் எல்லா போட்டிகளுக்கும் அனைத்து வீரர்களும் மிக முக்கியமான உடற்தகுதியைப் பேணுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. "அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து ஒருநாள் போட்டிகளை ஆட உள்ள நிலையில், வீரர்கள் ஃபிட்டாக இருப்பது அவசியம். அதற்காக எல்லா வீரர்களுக்கும் சிறப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தை யார் பின்பற்றினார்கள், யார் பின்பற்றவில்லை என்பதை பயிற்சியாளர் அறிந்துகொள்வார். தங்கள் திட்டத்தைப் பின்பற்றாத வீரர்களை என்ன செய்வது என்பது குறித்து அணி நிர்வாகம் பின்னர் முடிவெடுக்கும்," என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
View this post on Instagram
கே.எல்.ராகுலுக்கு பயிற்சியில் இருந்து ரெஸ்ட்
கே.எல். ராகுல் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், ஆலூரில் நடக்கும் கடுமையான உடற்பயிற்சியில் இருந்து அவர் விலக்கு பெற்றுள்ளார். தொடை அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் அவருக்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் 2023 ஆசிய கோப்பையில் குறைந்தது முதல் இரண்டு போட்டிகளை அவர் தவறவிடுவார். செப்டம்பர் 2ஆம் தேதி நடக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டியும் இதில் அடங்கும். "ராகுலுக்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படுவதால்தான் சஞ்சு சாம்சன் அணியுடன் பயணிக்கிறார். ஆசிய கோப்பையின் தொடக்கத்தில் இல்லையென்றாலும் கூட இரண்டாவது அல்லது மூன்றாவது ஆட்டத்தில் அவர் ஃபிட் ஆகிவிடுவார் என்று தெரிகிறது," என்று பிசிசிஐ தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் கூறினார். ஷ்ரேயாஸ் முழு உடல் தகுதி உடையவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.