கல்வியில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது - அமைச்சர் கோவி.செழியன் கண்டனம்
பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பேராசிரியர்கள் பொறுப்பேற்றால்தான், அவர்களுக்கு மாணவர்களின் நலன் தெரியும்.

தஞ்சாவூர்: மத்திய அரசு கல்வியைப் பறிக்கப் பார்க்கிறது. தமிழக அரசு உயர்கல்வியில் முந்துவதை மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் முட்டுக்கட்டை போடுகின்றன என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் கீழ ராஜ வீதியிலுள்ள தனியார் கணினி மையத்தில் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு திருத்தச் சட்ட வரைவைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாணவர்கள் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடந்தது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பல்கலைக்கழகத் துணைவேந்தராகக் கல்வியாளர்கள்தான் இருக்க வேண்டும் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. இந்தப் புதிய வரைவுக் கொள்கையில் கல்வியாளர் அல்லாதவரும் வரலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பேராசிரியர்கள் பொறுப்பேற்றால்தான், அவர்களுக்கு மாணவர்களின் நலன் தெரியும். ஆனால், பல்கலைக்கழக உரிமையைப் பறித்து, மாணவர் நலனைக் கெடுத்து, துணைவேந்தர் தேர்வுக் குழுவில் மாநில அரசின் பிரதிநிதியை இடம்பெறாமல் செய்வது எந்த வகையில் நியாயம்.
மத்திய அரசு கல்வியைப் பறிக்கப் பார்க்கிறது. தமிழக அரசு உயர்கல்வியில் முந்துவதை மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் முட்டுக்கட்டை போடுகின்றன. அதைத் தடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு முதல்வர் மேற்கொண்டுள்ளார். மாணவர்களும் ஆங்காங்கே தன்னெழுச்சியாக தாங்களாகவே முன் வந்து, புதிய வரைவு கொள்கையைத் திரும்பப் பெறு, மாநில உரிமையைப் பறிக்காதே என்கிற வாசகங்கள் அடங்கிய செய்திகளை மத்திய அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.
மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு திருத்தச் சட்ட வரைவில் மாணவர்களின் நலனில் உயர்கல்வியில் மிகுந்த சீரழிவைத் தரும் என்பது வேதனை. தமிழகம்தான் உயர் கல்வியில் முதலிடத்தில் இருக்கிறது. இதேபோல, தமிழகத்தில்தான் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
பல்கலைக்கழகம் அமைத்து, கட்டடங்கள் கட்டுவது, அரசாணை பிறப்பித்து மாணவர்கள் சேர்க்கை, பேராசிரியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் தருவது உள்பட அனைத்துமே தமிழக அரசு செய்கிறது. ஆனால், துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் கூட இருக்கமாட்டார்கள் என்பது கொடுமையானது.
இந்தச் சர்வாதிகார போக்கைக் கண்டித்து 9 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதன் பிறகு ஆந்திரம், கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கலில் இப்பிரச்னை பேசுபொருளாக மாறியுள்ளது. மாணவர்கள் ஏற்படுத்தி வரும் பெரும் எழுச்சி மூலம் புதிய வரைவு கொள்கை தடுத்து நிறுத்தப்படும். அதைக் காக்கும் பொறுப்பைத் தமிழ்நாடு முதல்வர் மேற்கொள்வார்.
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் புதிய துணைவேந்தர் நியமனத்துக்கு 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை அமைத்து ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பியது. ஆனால், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியதை ஆளுநர் ரத்து செய்துள்ளார். மாநில அரசு தேர்வு செய்த நபரை ஏற்றுக் கொள்வதுதான் ஆளுநருக்கும், அவரது பதவிக்கும் அழகு. மாறாக ஏற்றுக் கொள்ளமாட்டோம் என அடம்பிடிப்பது, மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக இருப்பது போன்றவை ஆளுநராக இருப்பதற்கான தகுதியை இழந்திருப்பதே மாணவர்களின் ஒட்டுமொத்த கண்டனக் குரலாக இருக்கிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு பிப்ரவரி 4 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதன் பிறகாவது ஆளுநர் திருந்துவாரா என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, திமுக தலைமைக் குழு உறுப்பினர் து. செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

