கொள்ளையடிக்க கும்பலாக சென்ற போது போலீசிடம் சிக்கிய 5 கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கைது
மயிலாடுதுறையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கொண்ட கும்பலை அரிவாள், உருட்டுகட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடப்பதை தடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, மயிலாடுதுறை காவல் துறையினர் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறையில் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் நேற்று இரவு மயிலாடுதுறை நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தைக்கால் தெருவில் உள்ள சின்ன மாரியம்மன் கோயில் அருகே 5 பேர் கொண்ட கும்பல் முகத்தில் கருப்பு துணி கட்டி பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை சுற்றி வளைத்து காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.
அப்போது அவர்களிடம் 3 அடி நீளமுள்ள வீச்சரிவாள் ஒன்றும், உருட்டுக்கட்டைகள் மற்றும் மிளகாய்ப்பொடி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்துள்ளனர். அதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மயிலாடுதுறை தருமபுரம் சாலையை சேர்ந்த 24 வயதான மணிகண்டன், ஆனந்ததாண்டவபுரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 23 வயதான அன்புமணி, குமரக்கட்டளைத் தெருவைச் சேர்ந்த 25 வயதான மணி, 5 ஆம் நம்பர் புதுத்தெருவைச் சேர்ந்த 23 வயதான முருகன், 4-ஆம் நம்பர் புதுத்தெருவைச் சேர்ந்த 23 வயதான குழந்தைவேலு என்பதும், இந்த 5 பேரும் ஒன்றாக சேர்ந்து அப்பகுதி ஆள் இல்லாத வீடுகளில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து 5 பேரையும் மயிலாடுதுறை காவல் நிலையம் கொண்டு சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் 5 பேரும் இதற்கு முன் ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு உள்ளார்களா என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரவு நேரங்களில் ஐந்து பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடிக்க முயற்சித்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் காவல்துறையின் ரோந்து பணியை அதிகரித்து பொதுமக்களும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.