சூரிய ஒளியில் உருவான ஓவியம் - மயிலாடுதுறையில் வைரலாகும் பெரியார்
பெரியாரின் 145 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் சூரிய ஒளியில் வரையப்பட்ட பெரியார் ஓவியம் தற்போது வைரலாகி வருகிறது.
தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாளான நேற்று நாடுமுழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிறப்பால் கன்னடரானாலும், தமிழக அரசியலில் இருந்து பிரிக்க முடியாத ஆளுமை திகழ்பவர் பெரியார். காலம் கடந்தும் களத்தில் நிற்கும் அவர் செயல்கள் பெரும் போற்றுதலுக்கானது. சமூகத்தின் ஆணுக்கு பெண் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி பெண்கள் கையில் உள்ள கரண்டியை பிடிங்கி விட்டு, புத்தகத்தை கொடுங்கள் என பெரியார் தன் காலத்திலேயே உரக்க முழங்கினார். இப்படி தன் வாழ்நாள் முழுவதும் பெண்களின் கல்விக்காகவும், சுயமரியாதைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தந்தை பெரியார் போராடியுள்ளார். ஈரோட்டில் 1879 -ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கர் சின்னத்தாய் அம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார் பெரியார். பெரியாருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராமசாமி. இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரரும், கண்ணம்மா, பொன்னுத்தாயி, என்ற சகோதரிகளும் இருந்தனர்.
சிறுவயதில் இருந்து ராமசாமி அதிக குறும்பு தனம் கொண்டவராக இருந்துள்ளார். ஆரம்ப காலத்தில் திண்ணை பள்ளியில் படித்தார். தன்னுடைய 12 -வது வயதில் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு தந்தையுடன் வியாபாரத்தை கவனிக்க தொடங்கினார். பெரியாருக்கு 19 வயது நிரம்பியபோது நாகம்மையை திருமணம் செய்து கொண்டார். பெரியார் நாகம்மை தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை 5 மாதத்தில் இறந்து விட்டது. அரசியலில் ஆர்வம் கொண்ட பெரியாருக்கு ஆரம்பத்தில் காந்தி கொள்கையில் ஈடுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 1919 -ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பல போராட்டங்களில் கலந்து கொண்ட பெரியார் 1922 -ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் தான் அரசுப்பணி, கல்வியில் இடஒதுக்கீடை ஏற்படுத்த காங்கிரஸ் மறுத்தது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பெரியார் 1925 -ல் காங்கிரஸ் இருந்து வெளியேறினார்.
சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு கடவுள் மறுப்பு என தீவிரமாக செயல்பட்டார். ராஜாஜி ஆட்சி காலத்தில் இந்தி திணிப்பு எதிராக நீதிக்கட்சி சார்பில் போராடி 1938 -ல் சிறையில் அடைக்கப்பட்டார். தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கு உழைத்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார். இப்படி தமிழகத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் இன்றளவும் பெரியாரின் பங்கு உள்ளது என்றால் மிகையல்ல. பெரியார் தனக்கு பிறகு கழகத்தின் சொத்துகளுக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படிதான் பெரியார் தம் வாரிசாக மணியம்மையை ஏற்க முடிவு செய்தார். ஆனால் அப்போதைய இந்திய சிவில் சட்டத்தின் படி ஒரு பெண்ணுக்கு தத்தெடுக்கும் உரிமையும் இல்லை. தத்து போகும் உரிமையும் இல்லை. இதனால் இரத்த உறவுகளுக்கு மட்டுமே வாரிசாக ஏற்கும் வகையில் சட்டம் இருந்தது.இந்நிலையில் பெரியாரின் மனைவி நாகம்மை ஏற்கனவே மறைந்திருந்தார். அவர்களுக்கு பிறந்த குழந்தையும் இறந்தே பிறந்திருந்ததால் வேறு வழியின்றி பெரியார் தன்னை விட 40 வயது இளைய மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். இது அன்றைய நாட்களில் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திராவிடர் கழக தொண்டர்கள் பிரிந்து சென்று திராவிடர் முன்னேற்ற கழகத்தை தொடங்கி தேர்தல் அரசியலில் பங்கேற்றனர் என்பதே வரலாறு.
அன்று மட்டும் அல்ல இன்றுவரை பெரியாரின் கருத்து எதிரான கருத்துகளை கொண்டவர்கள் முதலில் விமர்சிப்பது அவரது திருமணத்தையே. ஆனால் இதுபோன்ற எந்த சலசலப்புக்கும் அஞ்சாத பெரியார் இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காக 94 வயது வரை தமிழகம் முழுவதும் சுற்றி வந்து தன் கருத்தை முன்வைத்த வண்ணமே இருந்தார். இறுதியில் 1973 -ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி உயிரிழந்தார். பெரியார் மறைந்து 50 ஆண்டுகளான நிலையிலும் இந்த சமூகத்தின் ஒவ்வொரு நகர்விலும், அரசியலிலும், பெரியாரின் வார்த்தைகள் கருத்துகள் பேசுபொருளாகிக்கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் பெரியார் மறைந்தாலும் இன்றும் தன் தொண்டர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
அந்த வகையில், பெரியாரின் பிறந்தநாள் நாடுமுழுவதும் கொண்டாப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தோப்புத்தெருவை சேர்ந்த விக்னேஷ், தனது திறமைகளால் பல்வேறு ஓவியங்களை பூதக்கண்ணாடியால் சூரிய ஒளிக்கதிர் கொண்டு மரப்பலகையில் குவித்து ஓவியம் வரைந்து வருகிறார்.
இந்த சன் பர்னிங் வுட் ஓவியத்தை ஆசிய கண்டத்திலேயே இவர் ஒருவர் மட்டும்தான் வரைந்து வருகிறார். தற்போது பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியாரின் நினைவை போற்றும் வகையில் அவரது திருவுருவ படத்தை தனது திறமையால் சூரிய ஒளிக்கதிர் கொண்டு வரைந்து அசத்தியள்ளார். விக்னேஷ் தற்போது அவர் வரைந்த ஓவியத்தை அவரே வீடியோ ஒளிப்பதிவு செய்து இணையதளம் மூலம் பதிவிட்டுள்ளார். இந்த ஓவியம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி இருக்கிறது.