மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு - காரணம் என்ன?
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில், பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில், பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த பயன்பாடு, நம்பகத்தன்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டும், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்திடும் பொருட்டும் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, எதிர்வரும் 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2090, கட்டுப்பாட்டுக் கருவிகள் 1225 மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் 1281 ஆகியவை மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வளாகத்தில் மயிலாடுதுறை மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கவும் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, ஒப்புகை சீட்டு இயந்திரங்களை 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கு திறக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்திடும் பொருட்டு மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு 25 இயந்திரங்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு 27 இயந்திரங்களும், சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு 25 இயந்திரங்களும் காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இயந்திரங்கள் குறித்த பட்டியல் அனைத்து அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
தேர்தலின் போது, வாக்குப்பதிவிற்கு இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது. பொதுமக்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்களிப்பது குறித்த செயல்விளக்கம் அளித்திடும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வருவாய் கோட்ட அலுவலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் சட்டமன்ற தொகுதிக்கு 1 வீதம் தனியே செயல்விளக்க காட்சி அறை அமைக்கப்பட உள்ளதாகவும், மேலும், அனைத்து பகுதிகளுக்கும் செயல் விளக்கம் விரைவில் அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.