CM Stalin: 3 மாநில தேர்தல் முடிவுகள் INDIA கூட்டணிக்கு பின்னடைவா? புள்ளி விவரத்துடன் விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!
5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
CM Stalin: 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 மாநில தேர்தல்:
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த மத்திய பிரதேசத்தை தக்க வைத்துக் கொண்டே, ராஜஸ்தானையும், சத்தீஸ்கரையும் காங்கிரஸிடம் இருந்து தட்டிப் பறித்துள்ளது. இந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை உறுதி செய்வது என பிரதமர் மோடி பேசியிருந்தார். அதேபோல, தெலங்கானாவில் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று தனி மெஜாரிட்டி உடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ். மேலும், மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
எனவே, இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமில்லாமல் I.N.D.I.A கூட்டணிக்கே கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில், மத்தியில் இருக்கும் பாஜக நாடாளுமன்ற தேர்தலில் வென்று ஹாட்ரிக் முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது. மேலும், பாஜகவை வீழ்த்திட வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இச்சூழலில் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நம்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
"5 மாநில தேர்தல் முடிவுகள் 2024 தேர்தலில் எதிரொலிக்காது"
இதற்கு பதலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பவை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்தான். இது நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பாதிக்காது. பொதுவாகச் சட்டமன்றத் தேர்தலின் போது மாநிலப் பிரச்சினைகள்தான் தலைதூக்கிக் காணப்படும். அவைதான் இத்தகைய முடிவுக்குக் காரணம் ஆகும். ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் பேர்தான். சத்தீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள்தான் பா.ஜ.க அதிகம் பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும்தான் 35 லட்சம் வாக்குகளைக் கூடுதலாக பா.ஜ.க பெற்றுள்ளது.
பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், ஒருமுகப்பட்டிருக்குமானால் இந்த மூன்று மாநில வெற்றியை பா.ஜ.க பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை. நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும். அதன் மூலமாக நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை நாங்கள் பெறுவோம். மூன்று மாநிலத் தேர்தல் முடிவைப் படிப்பினையாகவே நாங்கள் பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.